Published : 20 Jan 2023 09:02 PM
Last Updated : 20 Jan 2023 09:02 PM

நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ராஜினாமா முடிவு செய்திக்கு தரக்குறைவான தலைப்பு: மன்னிப்புக் கோரிய பிபிசி

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் | கோப்புப்படம்

லண்டன்: நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வியாழன் அன்று தெரிவித்தார். அதனை உலக செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டன. உலக அளவில் கவனம் பெற்ற செய்தி நிறுவனமான பிபிசியும் இது குறித்து செய்தி வெளியிட்டது. ஆனால், அது பாலியல் பாகுபாட்டுடன் கூடிய தரக் குறைவான தலைப்பை வைத்து சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிபிசி தரப்பு மன்னிப்பு கோரியுள்ளது. "Can women have it all?" என்ற தலைப்பில் முதலில் செய்தி வெளியிட்டது பிபிசி. பெண்களால் எல்லாம் முடியுமா என்பதை குறிக்கும் விதமாக இந்தத் தலைப்பு இருந்தது. இது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு பதவி விலகிய பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட ஆடவர் அரசியல் தலைவர்களின் செய்தி கவரேஜ் குறித்து ஒப்பிட்டு சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், பெண்கள் மீதான வெறுப்புணர்வை பிபிசி வெளிப்படுத்துகிறது எனவும் சொல்லி இருந்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த தலைப்பை “அழுத்தம் காரணமாக பிரதமர் பதவி விலகுவதாக தெரிகிறது” என பிபிசி மாற்றியது. “எங்கள் தரப்பில் அந்தக் கட்டுரைக்கான தலைப்பு சரியானதாக இல்லை என அறிந்து கொண்டோம். தொடர்ந்து அதை மாற்றினோம். மேலும், அது தொடர்பான ட்வீட்களை நீக்கினோம்” என பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா, இயற்கை சீற்றம், பயங்கரவாத தாக்குதல் போன்ற சூழல்களை கையாண்டவர் பிரதமர் ஜெசிந்தா. இதற்கு முன்னர் கடந்த நவம்பரில் பின்லாந்து பிரதமர் சன்னா மரினுடன் இணைந்து செய்தியாளர்களை ஜெசிந்தா சந்தித்தார்.

“தங்கள் இருவருக்கு இடையிலும் சில பொதுவான ஒற்றுமைகள் இருப்பதால் இந்தச் சந்திப்பா?” என அப்போது அவர்களிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முன்னாள் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ சந்திப்பை ஒப்பிட்டு ஜெசிந்தா பதில் அளித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x