Published : 18 Jan 2023 09:34 AM
Last Updated : 18 Jan 2023 09:34 AM

திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கைகள் துண்டிப்பு: தலிபான்கள் கொடூர தண்டனை

காபூல்: திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரின் கைகளை தலிபான்கள் பொது மக்கள் முன்னிலையில் துண்டித்த கொடூரம் நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. 1990களில் இருந்தது போல் எங்கள் ஆட்சி இருக்காது என்று தலிபான்கள் அறிவித்தாலும் அங்கு எதுவும் மாறவில்லை. பெண் கல்விக்கு தடை, பெண்கள் வேலை பார்க்கத் தடை, ஆண்கள் ஸ்டைலாக தலைமுடி வெட்டிக் கொள்ள தடை. தாடியை எடுத்தால் தண்டனை. இசை, சினிமா, கேளிக்கைக்கு தடை. பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளியே வந்தால் தண்டனை. பெண்கள் முழுமையாக உடலையும் முகத்தையும் மறைக்கும் நீல நிற புர்கா அணியாவிட்டால் தண்டனை என பழைய மாதிரியே தண்டனைகளை கட்டுப்பாடுகளை கட்டவிழ்த்துள்ளது தலிபான் அரசு.

ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை சந்தித்துள்ளது. வேலையின்மை, பசி, பட்டினி, நோய், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிப்பு, தொற்று நோய் பரவல் என பல பிரச்சினைகள் அங்கு தலைவிரித்து ஆடுகின்றன.

அரசு சொல்லும் கசையடி: இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) தலிபான்கள் காந்தஹாரில் உள்ள அகமது சாஹி கால்பந்து மைதானத்தில் வைத்து திருட்டில் ஈடுபட்டதாக 9 பேருக்கு கசையடி கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. காந்தஹார் மாகாண மக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 35 முதல் 39 கசையடிகள் வழங்கப்பட்டன என்றும் மாநில ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜெய்த் கூறினார்.

கசையடி அல்ல கைகள் துண்டிப்பு: ஆனால், ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரின் ஆலோசகரான ஷபானா நசிமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில், காந்தஹார் கால்பந்து மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் திருட்டில் ஈடுபட்டு கைதான 4 பேரின் கரங்கள் துண்டிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கசையடி, கை, கால் துண்டிப்பது, உயிரை எடுப்பது போன்ற கொடூர தண்டனைகள் தலிபான்கள் கட்டவிழ்த்துவிடுகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சர்வதேச சமூகங்களின் பல்வேறு அறிவுறுத்தல்களுக்கும் மத்தியில் தலிபான்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x