Published : 17 Jan 2023 05:33 PM
Last Updated : 17 Jan 2023 05:33 PM

சட்டப்பிரிவு 370 ரத்தை நீக்கினால் மட்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் விளக்கம்

ஷெபாஸ் ஷெரீப் | கோப்புப் படம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ''இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அனுமதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்சினைகளாக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும். இதுதான் நான் இந்திய தலைமைக்கு விடுக்கும் செய்தி. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்காற்ற முடியும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். ஒன்றாகத்தான் வாழ்ந்தாக வேண்டும். நாட்டில் எந்த அளவுக்கு அமைதி இருக்கிறதோ அந்த அளவுக்கே முன்னேற்றம் இருக்கும். இரு நாடுகளும் சண்டையிட்டுக்கொண்டே இருந்தால் நேரமும் பணமும்தான் வீணாகும். இந்தியாவுடன் நாங்கள் 3 போர்களை சந்தித்துவிட்டோம். இந்த போர்கள் பாகிஸ்தானியர்களுக்கு கூடுதலான துன்பத்தையும், வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையுமே அளித்திருக்கின்றன. நாங்கள் எங்களுக்கான பாடத்தை தற்போது கற்றுக்கொண்டுவிட்டோம். எனவே, அமைதியை விரும்புகிறோம்'' என ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

ஷெபாஸ் ஷெரீப்பின் இந்தs செய்தியை இந்திய செய்தி நிறுவனங்கள் இன்று வெளியிட்டதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் அலுவகம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், ''இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, முக்கிய பிரச்சினையாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதையே அவர் கூறி வருகிறார்.

இருந்தபோதிலும், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டவிரோதமாக திரும்பப் பெற்ற ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப கொண்டுவந்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சிறப்பு அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படாத வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை. ஐ.நா தீர்மானத்தின்படியும், ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு இணங்கவுமே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் ஷெரீப் இதனை தெளிவாகவே தெரிவித்துள்ளார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x