Published : 17 Jan 2023 04:59 AM
Last Updated : 17 Jan 2023 04:59 AM

பெருமுதலாளிகளால் ஊடகத் துறையின் தரம் சரிகிறதா?: ‘புளூம்பெர்க்’ மேத்யூ விங்க்லர் மற்றும் ‘தி இந்து’ என்.ராம் கலந்துரையாடல்

மேத்யூ விங்க்லர் மற்றும் என்.ராம்

சென்னை: ஊடகத் துறையில் பெருமுதலாளிகளின் ஆதிக்கம் குறித்து நேற்று சென்னையில் உள்ள ஏசிஜே இதழியல் கல்லூரியில் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம்) கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் முன்னாள் முதன்மை ஆசிரியர் மேத்யூ விங்க்லர் மற்றும் ‘தி இந்து’ என்.ராம் பங்கேற்று இதழியல் துறை மாணவர்களுடன் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலை ஏசிஜே கல்லூரியின் தலைவர் சசிகுமார் ஒருங்கிணைத்தார்.

சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் ஊடகத் துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது, பெருமுதலாளிகளின் கைகளில் ஊடக நிறுவனங்கள் செல்வதால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் என்ன, ஊடகத் துறை லாபகரமானதாக செயல்படுவதற்கான வழிமுறைகள் என்ன என்பன குறித்து மேத்யூவிங்க்லரும், என்.ராமும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

மேத்யூ விங்க்லர் பேசியதாவது: மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பதுதான் இதழியலின் மிக அடிப்படை நோக்கம். ஆனால், ஒரு செய்தி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு சில வணிக வழிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும். அந்த வழிமுறை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

சில நிறுவனங்கள் லாபநோக்கற்றதாக, எந்த வருமானத்தையும் எதிர்பார்க்காமல் செயல்படும். சில நிறுவனங்கள் இதழியல் அறத்திலிருந்து விலகாமல் தங்களுக்கென்று தனித்துவமான வணிக வாய்ப்புகளை உருவாக்கி இருக்கும். புளூம்பெர்க் அத்தகைய ஒரு நிறுவனம்தான். புளூம்பெர்க் நிறுவனர் பெரும் செல்வந்தர் என்றாலும், அந்தப் பணபலத்தின் அடிப்படையில் புளூம்பெர்க் நிறுவனம் தொடங்கப்படவில்லை. ஆனால், நாங்கள் புளூம்பெர்க்கை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கான வழிமுறைகளை உருவாக்கினோம்.

அமெரிக்காவில் பலதரப்பட்ட ஊடக நிறுவனங்கள் உள்ளன. செல்வந்தர்களால் தொடங்கப்பட்ட நிறுவனங்களும் உண்டு, மிகச்சாதாரண நிலையில் இருந்தவர்களால் தொடங்கப்பட்ட நிறுவனங்களும் உண்டு. பெரும் முதலீடுகள் இல்லாமல் சாதாரணமாக தொடங்கப்பட்டு, இன்றும் மிகப் பெரும் சொத்து மதிப்பைக் கொண்டதாக பல ஊடக நிறுவனங்கள் உருவாகி இருக்கின்றன.

எனவே, ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு, நிறுவனத்தின் உரிமையாளரின் பணபலம் இவற்றைக் கொண்டு ஒரு ஊடகத்தை நாம் மதிப்பிடக் கூடாது. அந்நிறுவனம் நேர்மையாக செயல்படுகிறதா, சரியான தகவல்களை வழங்குகிறாதா என்பதன் அடிப்படையிலேயே நாம் ஒரு நிறுவனத்தை மதிப்பிட வேண்டும். இவ்வாறு மேத்யூ விங்க்லர் பேசினார்.

‘தி இந்து’ ராம் பேசியதாவது: இந்தியாவைப் பொறுத்தவரையில் ஊடகங்கள் பெருமுதலாளிகளின் கைகளுக்கு மிக வேகமாக சென்றுகொண்டிருக்கின்றன. மிகக் குறிப்பாக காட்சி ஊடகங்கள். இந்தியாவின் முக்கியமான ஊடகமான என்டிடிவியை இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி வாங்கியிருப்பது சமீபத்திய உதாரணம்.

அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளின் கைகளுக்குஊடகங்கள் செல்லும்போது, ஊடகங்களின் இயல்புகள் மாறிவிடுகின்றன. ஊடகங்களின் சுதந்திரம் முற்றிலும் பறிபோய்விடுகிறது. முதலாளிகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவகையில் ஊடகங்கள் செயல்படத் தொடங்கிவிடுகின்றன.

அதானி குழுமம், என்டிடிவியை வாங்கும்போது, செய்திகள் சார்ந்துதலையிட மாட்டோம் என்று கூறியது.ஆனால், தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? என்டிடிவியின் செய்தி வெளியீட்டில் அதானிகுழுமம் தீவிரமாக தலையிடத் தொடங்கி இருக்கிறது.

ஊடகங்கள் பெருமுதலாளிகளின் வசமாவது ஆபத்தான போக்கு. கருத்துச் சுதந்திரம் சார்ந்து நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் இந்திய ஊடகத் துறை, சமீபமாக இதழியல் அறம் சார்ந்தும் மிகப் பெரும் சரிவுக்கு உள்ளாகி வருகிறது.

இவ்வாறு என்.ராம் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x