Published : 14 Jan 2023 05:49 PM
Last Updated : 14 Jan 2023 05:49 PM
பெய்ஜிங்: சீனாவில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி வரை கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 938 என தெரிவித்துள்ளார்.
இது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே என்பதால் கரோனா பெருந்தொற்றால் கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட கூடுதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 5,503 பேர், உடல் ரீதியிலான பாதிப்பு வேறு ஏதும் இல்லாதவர்கள் என்றும், கரோனா வைரசால் ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக மட்டுமே உயிரிழந்தவர்கள் என்றும் ஜியாவோ யாஹூ தெரிவித்துள்ளார். வேறு உடல் உபாதைகளோடு கரோனா வைரஸ் பாதிப்பும் சேர்ந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 435 என்றும் அவர் கூறியுள்ளார்.
கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தனது கொள்கையை கடந்த டிசம்பர் தொடக்கத்தில் சீனா தளர்த்தியது. இதையடுத்து அந்த நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்தது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன.
சீனா உண்மையான விவரங்களை பகிர வேண்டும் என்றும் அது உலக சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. எனினும், சீனா இதனை ஏற்கவில்லை. பாதிப்புகளை குறைத்து காட்ட வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என்று சீன சுகாதரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT