Published : 13 Jan 2023 03:04 PM
Last Updated : 13 Jan 2023 03:04 PM
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி எழுதிய ’ஸ்பேர்’ புத்தகம் குறித்து கருத்து தெரிவிக்க இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் மறுத்துவிட்டனர்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10-ம் தேதி வெளியாகியது. அதில், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பலவற்றை பதிவிட்டுள்ளார். குறிப்பாக, மேகன் மார்கல் உடனான திருமணம் அரசக் குடும்பத்தில் எத்தகைய எதிர்ப்புகளை பெற்று தந்தது உள்ளிட்ட பல கருத்துகளை அவர் இப்புத்தகத்தில் முன் வைத்து இருக்கிறார்.
ஹாரியின் ’ஸ்பேர்’ புத்தகம் இங்கிலாந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தச் சூழலில் ஸ்பேர் புத்தகம் குறித்து நிகழ்வு ஒன்றில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்டிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளிக்க இருவரும் மறுத்துவிட்டனர்.
ஸ்பேர் புத்தகத்தில் மேகன் மார்கல் உடனான தனது காதலுக்கு இளவரசர் வில்லியம் எவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறித்தும், அவர் தன்னை தாக்கியது குறித்தும் ஹாரி அதில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ’ஸ்பேர்’ புத்தகம் வெளியான முதல் நாளிலே சுமார் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.
ஹாரி இங்கிலாந்து அரசு குடும்ப சலுகைகளை துறந்துவிட்டு மனைவியுடன் சாமானியராக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT