Published : 13 Jan 2023 06:17 AM
Last Updated : 13 Jan 2023 06:17 AM
புதுடெல்லி: சர்வதேச அரங்கில் புதியதொரு விதி செய்வோம். ஐ.நா. சபையை மாற்றி அமைப்போம் என்று தெற்கு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த சர்வதேச அமைப்பில் அமெரிக்கா தலைமையிலான அணியும் ரஷ்யா தலைமையிலான அணியும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன. இரு பக்கமும் சாயாத “குரூப் 77” என்ற அமைப்பு அண்மைக்காலமாக ஐ.நா. சபையில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. “குளோபல் சவுத்” என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இந்த அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களை சேர்ந்த 134 நாடுகள் உள்ளன. இந்தியா, பிரேசில், இந்தோனேசியா, நைஜீரியா உள்ளிட்டவை “குரூப் 77” அமைப்பை வழிநடத்தும் நாடுகளாக செயல்படுகின்றன.
இந்த சூழலில் இந்தியா சார்பில் “குளோபல் சவுத்” என்ற பெயரிலான 2 நாள் காணொலி உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 120 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்தியாவின் 130 கோடி மக்கள் சார்பாக அனைத்து நாடுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போர், மோதல், தீவிரவாதம், அரசியல் பதற்றங்கள், உணவு, உரம், எரிசக்தி விலை உயர்வு, இயற்கைபேரிடர்கள், கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் உலகம் நெருக்கடியான நிலையிலேயே இருக்கிறது.
உலகின் தெற்கு பகுதி நாடுகளைச் சேர்ந்த நமக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. உலக மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கு மக்கள் நமது நாடுகளில் வசிக்கின்றனர். எனவே சர்வதேச அரங்கில் நமக்கும் சமமான குரல் இருக்க வேண்டும்.
உலகில் தற்போது எற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தெற்கு நாடுகள் காரணம் இல்லை. ஆனால்நாம் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். சர்வதேச பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட சமாளித்து வருகிறது. எங்களது அனுபவத்தை தெற்கு நாடுகளோடு பகிர்ந்து வருகிறோம். கரோனா பெருந்தொற்றின்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள், தடுப்பூசிகளை வழங்கினோம். தெற்கு நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கிறது.
இந்த ஆண்டு ஜி 20 தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இந்த நேரத்தில் தெற்கு நாடுகளின் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதே எங்களின் நோக்கமாகும். ஒரே பூமி, ஒரே குடும்பம்,ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளுடன் ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ளோம். உலகம் ஒன்றுபடுவதன் மூலம் மட்டுமே அமைதி, வளர்ச்சி சாத்தியமாகும்.
இந்நேரத்தில் புதியதொரு விதி செய்வோம். சர்வதேச அரசியல், நிதி நிர்வாகத்தை மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டும். வடக்கு, தெற்கு ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய சமநிலையான சர்வதேச சூழலை உருவாக்க வேண்டும். ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும். அந்த அமைப்புகளில் சீர்திருத்தம் செய்து, இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும். 21-ம் நூற்றாண்டு தெற்குநாடுகளின் நூற்றாண்டாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நாள் மாநாட்டில் பல தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT