Published : 01 Dec 2016 03:21 PM
Last Updated : 01 Dec 2016 03:21 PM
அமைதி மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்காக பணியாற்றுவதாக மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூச்சி கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் மியான்மர் சார்பாக பங்கேற்ற அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூச்சி பேசும்போது, "பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட மியான்மர் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைய முதலீட்டாளர்களை கவர்வது மிகவும் தேவையான ஒன்று. அரசியல் நிலைத்தன்மையில்லாத நாட்டில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் விரும்ப மாட்டார்கள்.
எனவே உள்நாட்டு சவால்களை எதிர்கொள்வது அவசியம். நம் நாடு பல்வேறு கலாச்சார சமூகங்களைக் கொண்டது. ஆனால், தொடர்ந்து ஒற்றுமையற்ற வரலாற்றைக் கொண்டுள்ளோம். நாட்டின் அமைதி மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்காக பணியாற்றுவது மிக முக்கியம்" என்று பேசினார்.
ரோஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்சினையில் மவுனம்:
மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தி வரும் வன்முறைகள் குறித்து ஆங் சான் சூச்சுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் தொடர்ந்து ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றி சூச்சி மவுனம் சாதித்தார்.
மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது ராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
படுகொலை, சித்ரவதை, பாலியல் பலாத்காரம் என்று கடுமையான தாக்குதல்கள் மூலம் ரோஹிங்யா முஸ்லிம்களை அச்சுறுத்தி, அவர்களது வாழ்விடத்திலிருந்து விரட்டும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குத் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஆங் சான் சூச்சி மீது மலேசியா, இந்தோனேசியாவிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT