Published : 10 Dec 2016 06:43 PM
Last Updated : 10 Dec 2016 06:43 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்ய அரசு திரைமறைவு செயல்களில் ஈடுபட்டது என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இ-மெயில் விவகாரம்
ஹிலாரி கிளின்டன் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அரசு இ-மெயில் சேவையை பயன்படுத்தாமல் தனிப்பட்ட இ-மெயில் சர்வரை பயன்படுத்திய விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் எழுப்பி வந்தார்.
அதிபர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஹிலாரி கிளின்டன் தொடர்பான 6.5 லட்சம் இ-மெயில்கள் ஊடகங்களில் வெளியாகின. இவை தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க புலனாய்வு போலீஸ் பிரிவான எப்பிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமே அறிவித்தார். இந்த விவகாரம் ஹிலாரி கிளின்டனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
சிஐஏ ரகசிய அறிக்கை
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் ஹிலாரி தொடர்பான இ-மெயில்களை விக்கிலீக்ஸ் மூலம் ரஷ்ய உளவுப் பிரிவு வெளியிட்டுள்ளது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ ரகசிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆனால் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே ரஷ்யாவுடனான தொடர்பை ஏற்கெனவே மறுத்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சிஐஏ வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் ட்ரம்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் விருப்பம். அதற்காக சில திரைமறைவு செயல்களில் ரஷ்ய உளவு அமைப்பு ஈடுபட்டது. ரஷ்ய அரசோடு தொடர்புடைய சில தனிநபர்கள் ஹிலாரி தொடர்பான இ-மெயில்களை விக்கி லீக்ஸ் இணையதளத்துக்கு அளித்தனர். அதன்மூலமாகவே ஹிலாரியின் இ-மெயில்கள் வெளியாகின என்று சிஐஏ ரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சிஐஏ அமைப்பு நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டது. எனினும் ரஷ்ய உளவு அமைப்பின் இணையதள தாக்குதல் குறித்து விசாரணை நடத்த அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்ப் தரப்பு மறுப்பு
இதுகுறித்து ட்ரம்ப் வட்டாரங்கள் கூறியதாவது: இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் அணுகுண்டுகளை வைத்துள்ளார் என்று இதே சிஐஏ அமைப்புதான் கூறியது. இராக் போருக்குப் பிறகு அது பொய் என்பது உறுதியானது. இப்போது ட்ரம்ப் மீது சிஐஏ அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. தேவையில்லாத சர்ச்சைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு அமெரிக்காவை அசைக்க முடியாத சக்தியாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT