Published : 10 Jan 2023 08:33 AM
Last Updated : 10 Jan 2023 08:33 AM
தைபே: தைவானை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 52 மாத ஊதியத்தை போனஸாக வழங்கியுள்ளது.
தைவானின் டாயூவான் நகரை தலைமையிடமாகக் கொண்டு எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்திடம் 150-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் உள்ளன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆண்டு இறுதியில் தனது லாபத்தில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குகிறது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டில் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு 40 மாத சம்பளத்தை போனஸாக வழங்கியது.
இதைத் தொடர்ந்து 2022-ம்ஆண்டுக்கான போனஸ் தொகையை எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் அண்மையில் ஊழியர்களுக்கு வழங்கியது. குறைந்தபட்சம் 45 மாத ஊதியமும் திறன்வாய்ந்த ஊழியர்களுக்கு 52 மாத ஊதியமும் போனஸாக வழங்கப்பட்டன.
இந்த நிறுவனத்தில் புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.1.35 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடைநிலை ஊழியருக்கு 52 மாத ஊதியமாக ரூ.70 லட்சம் வரை போனஸ் கிடைத்திருக்கிறது. நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சில கோடிகளை போனஸாக பெற்றிருப்பதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தைவானை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இதே பாணியில் ஊழியர்களுக்கு போனஸை அள்ளி வழங்கியுள்ளன.
எவர் கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவன வட்டாரங்கள் கூறும்போது, “உக்ரைன் போரால் சரக்கு கப்பல் போக்குவரத்து வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு 2023-ம் ஆண்டில் உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால் சரக்கு கப்பல் போக்குவரத்து ஊக்கம் பெறும். எங்கள் நிறுவன வருவாயும் அதிகரிக்கும். ஊழியர்களுக்கு இதைவிட கூடுதலாக போனஸ் வழங்குவோம்" என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT