Published : 10 Jan 2023 06:41 AM
Last Updated : 10 Jan 2023 06:41 AM
புதுடெல்லி: பிரேசில் அதிபர் தேர்தலில் வலதுசாரி ஜெயிர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் தற்போதைய அதிபர் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தினர். இதில், போலீஸாரின் காவலை அத்துமீறிய போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை உச்ச நீதிமன்றத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
இந்த தாக்குதல் "பாசிச" வாதிகளால் நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள பிரேசில் அதிபர் லூலா இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
இந்த கலவரத்துக்கும் தனக்கும்எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ள முன்னாள் அதிபர் போல்சனாரோ. குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதில் கூறியதாவது:
பிரேசில் அரசுக்கு எதிராக ஏற்பட்ட கலவரத்தில், நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, உச்சநீதிமன்றம் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. இது, மிகவும் ஆழ்ந்த கவலை தரக்கூடிய செய்தியாக அமைந் துள்ளது.
ஜனநாயக மரபுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். பிரேசில் அரசுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும். இவ்வாறு பிரதமர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT