Published : 20 Dec 2016 03:04 PM
Last Updated : 20 Dec 2016 03:04 PM
துருக்கியின் தலைநகர் அங்காராவில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் அந்நாட்டு போலீஸ் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை தனது கேமராவில் பதிவு செய்த அசோசியேடட் பிரஸ்ஸின் புகைப்பட நிருபர் புர்கான் ஒஸ்பிலிக் தனது ஆபத்தான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ புர்கானே பதற்றமான தனது நிமிடங்களை விவரிக்கிறார்:
"ரஷ்யாவைப் பற்றிய புகைப்பட கண்காட்சி அது. ரஷ்யாவின் கலின்ங் கிராட் நகர் முதல் கம்சாட்கா நகர் வரை தொடர்பான புகைப்படங்கள் அந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. எனவே அந்தக் கண்காட்சியில் நான் கலந்து கொள்ள முடிவு செய்தேன். ஏனெனில் என் அலுவலகத்துக்கு செல்லும் வழியில்தான் அந்தக் கண்காட்சி நடைபெற்றது.
நான் கண்காட்சிக்கு நுழையும் முன்னரே அங்கு உரைகள் தொடங்கப்பட்டு விட்டன. அதற்கு பின் ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் தனது உரையைத் தொடங்கினார்.
நான் புகைப்படம் எடுப்பதற்காக அவர் அருகில் சென்றேன். துருக்கி - ரஷ்ய உறவு தொடர்பான செய்திக்கு உபயோகப்படும் வகையில் அந்தப் படங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.
அதுவரை அந்த இடம் வழக்கமான புகைப்பட கண்காட்சியாகவே இருந்தது.
பிறகு திடீரென்று கருப்பு நிற கோட் சூட் அணிந்த அந்த நபர் துப்பாக்கியை வெளியே எடுக்கும்போது நான் திகைத்து நின்றேன். நான் அதனைத் திரைப்பட காட்சி என்று முதலில் நினைத்தேன்.
குறுகிய முடி வைத்திருந்த அந்த நபர் துப்பாக்கியை எடுத்து துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவை 8 முறை சுட்டார். அங்கிருந்த மக்கள் பயந்து மேசைகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். நான் சற்று பயந்து, குழம்பிய நிலையில் இருந்தேன். இருந்தாலும் நான் சுவருக்கு பின்னால் மறைந்து கொண்டு புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். மிக நிதானமாக திட்டமிட்டு இந்தப் படுகொலையை அந்த நபர் செய்தார்.
அதன்பின் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பார்வையாளர்கள் பீதி அடைந்தனர். சுடப்பட்ட ரஷ்ய தூதர் எனக்கு சற்று அருகிலேயே தரையில் விழுந்து கிடந்தார். அவரது உடலிலிருந்து ரத்தம் வெளிவரவில்லை. ஒருவேளை அந்த நபர் அவரை பின்னால் சுட்டிருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர். | படம்: ஏபி
நான் அங்கு சில வினாடிகள் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நடந்தவற்றை கவனித்தேன். ஒரு மனிதர் என் முன்னால் இறந்து கிடக்கிறார். அவரது வாழ்க்கை எனது கண் முன்னால் மறைந்துவிட்டதை உணர்தேன்.
அதன் பிறகு இடது பக்கமாக பின் நோக்கி சென்று விட்டேன். முதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரின் நோக்கம் எதுவென என்னால் அறிய முடியவில்லை. அவரை தீவிரவாதி என்று நான் நினைத்தேன். அந்த நபர் சிரியாவின் அலெப்போ நகர் குறித்து உரக்க குரல் எழுப்பினார் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தவுடன் அறிந்து கொண்டேன்.
சிரிய அரசுப்படைக்கு ஆதரவாகச் செயல்படும், ரஷ்ய அரசின் மீது கோபம் கொண்டு இந்தத் தாக்குதலை அவர் நடத்தியுள்ளது தெரியவந்தது. அலெப்போ நகரில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டதில் கோபம் கொண்டு இந்த துப்பாக்கிச் சூட்டை அவர் நடத்தியிருக்கிறார்.
ரஷ்ய தூதரை சுட்டுக் கொன்று அந்த நபர் கோபத்துடன் அவரது உடல் அருகே சென்றார். பின் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை துப்பாக்கியால் சுட்டார்.
எனக்கு அந்த காட்சிகளை புகைப்படங்களாக எடுக்கும்போது பயமாகத்தான் இருந்தது. அந்த நபர் என் மீதும் திரும்பலாம் என்று.
அதன்பின்னர், அந்த நபர் மிகுந்த கோபத்துடன் அங்கிருந்த பார்வையாளர்களை பின்நோக்கிச் செல்லுமாறு உரக்கக் கத்தினார். பின்னர் அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்த, நாங்கள் வெளியேறினோம்.
நாங்கள் வெளியேற்றப்பட்டதும். ஆம்புலன்ஸ்கள் மற்றும் வாகனங்கள் கொண்டு வரப்பட்டு போலீஸார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். அதன் பின்னர்தான் தெரிய வந்தது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் துருக்கி காவல்துறையைச் சேர்ந்த அல்டினாஸ் (22) என்று.
நான் அங்கு இருக்கும்போது இதைத்தான் எண்ணிக் கொண்டேன், ஒருவேளை எனக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம். எனது உயிரும் போயிருக்கலாம். நான் ஒரு பத்திரிகையாளர். நான் எனது பணியைச் செய்ய வேண்டும். நான் புகைப்படங்கள் எடுக்காது அங்கிருந்து தப்பித்து ஓட முடியும். நான் அவ்வாறு ஒடி இருந்தால், ஏன் நீங்கள் அந்த கொலைச் சம்பவத்தை புகைப்படம் எடுக்கவில்லை என்று கேட்பவர்களுக்கு பதில் கூற முடியாமல் போயிருக்கும்.
மேலும், நான் அங்கு இருக்கும் போது இதே போன்ற சம்பவங்களில் உயிரிழந்த எனது நண்பர்களையும், சக பணியாளர்களையும் நினைத்துக் கொண்டேன்.
அலுவலகத்துக்கு வந்து எடுத்த புகைப்படங்களை எடிட் செய்யும்போது நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த நபர் ரஷ்ய தூதர் பேசும்போது அவருக்கு பின்னால் சாதுவான நண்பர் அல்லது பாதுகாவலர் போல அவர் நின்று கொண்டிருந்தார். தூதரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது காவல் துறை அடையாள அட்டையை காண்பித்து கலை அரங்கிற்குள் நுழைந்துள்ளார்" இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT