Published : 07 Jan 2023 10:49 AM
Last Updated : 07 Jan 2023 10:49 AM
வர்ஜினியா: அமெரிக்காவில் 6 வயது பள்ளிச் சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு யாருக்கும் காயமில்லை. சம்பந்தப்பட்ட சிறுவனை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றது.
இந்த சம்பவம் வர்ஜினியா மாகாணத்தில் ரிச்நெக் மழலையர் பள்ளியில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறை தலைவர் ஸ்டீவ் ட்ரூ கூறுகையில், "இந்த சம்பவம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 6 வயது தான் ஆகிறது. அவன் வகுப்பறையில் திடீரென்று துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான். இதில் அவனது ஆசிரியர் காயமடைந்தார். 30 வயதான அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனிடம் விசாரித்து வருகிறோம்" என்றார்.
வர்ஜினியா மாகாண பள்ளிகள் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பார்கர் கூறும்போது, "நான் அதிர்ச்சியில் உள்ளேன். மிகுந்த மனவேதனையிலும் இருக்கிறேன். இளைஞர்கள் கைகளில் துப்பாக்கி கிடைக்காததை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் கொலை சம்பவங்கள். எஞ்சியவை விபத்து, தற்காப்பு, தற்கொலை சம்பவங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT