Published : 06 Jan 2023 01:26 PM
Last Updated : 06 Jan 2023 01:26 PM
உக்ரைன்: இரண்டு நாட்கள் ரஷ்யா விடுத்த போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைன் நிராகரித்துள்ளது.
ரஷ்யாவில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து ரஷ்ய அதிபர் புதின் விடுத்துள்ள அறிவிப்பில், “புனித நாளை முன்னிட்டு ஜனவரி 6, ஐனவரி 7 ஆகிய தேதிகளில் போர் நிறுத்த அறிவிப்பை நான் அறிமுகப்படுத்துகிறேன். கிறிஸ்துமஸ் தினத்தில் மக்கள் சேவைகளில் பங்கு கொள்ள அனுமதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்க உக்ரைன் மறுத்துவிட்டது.
போர் நிறுத்த அறிவிப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது, "உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸிலில் எங்கள் ராணுவம் முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றங்களை நிறுத்தவும், போருக்கு தேவையான கூடுதல் ஆயுதங்களைக் கொண்டு வரவுமே இந்தப் போர் நிறுத்தத்தை ரஷ்யா விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.
புதினின் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “புதின் இதனை ஆசுவாசப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்துகிறார். டிசம்பர் 25 மற்றும் புத்தாண்டு தினத்தில் கூட தேவாலயங்கள், மருத்துவமனைகள் மீது புதின் ராணுவம் குண்டு வீசியது” என்றார்.
தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மக்கிவ்கா நகரில் ரஷ்ய ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் பலியாகினர். ரஷ்யா - உக்ரைனின் போரில் ரஷ்யா சந்தித்த பெரும் இழப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் போர் நிறுத்த அறிவிப்பை புதின் வெளியிட்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT