Published : 03 Jan 2023 04:02 PM
Last Updated : 03 Jan 2023 04:02 PM
பீஜிங்: சீனாவில் சமீப நாட்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவில் இருந்துவரும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் கெடுபிடி விதித்துள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள் சீன பயணிகளுக்கு மட்டும் இந்தக் கெடுபிடியை விதித்துள்ளன.
இந்நிலையில், இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "சில நாடுகள் சீனப் பயணிகளை மட்டுமே கரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் என்று கெடுபிடி செய்கின்றன. இந்த மாதிரியான நெருக்கடியின் பின்னணியில் அடிப்படை அறிவியல் உண்மை இல்லை. இது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அவ்வாறாக சீனர்களை மட்டும் நெருக்குதலுக்கு உள்ளாக்கும் நாடுகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
2019-ல் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட பின்னர் அங்கு ஜீரோ கோவிட் என்ற இலக்குடன் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவிவந்தன. இந்நிலையில் கடந்த மாதம் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து இந்த ஜீரோ கோவிட் கெடுபிடியை அரசு தளர்த்தியது. இதனால் மீண்டும் மக்கள் மத்தியில் தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. ஒமிக்ரானின் பி.எப்.7 திரிபு வைரஸ் பரவுவதாகவும் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் பலமுறை கோரியும் கூட சீனா இதுவரை தொற்று, உயிரிழப்பு எண்ணிக்கை விவரங்களை பகிர்வதில்லை. இதனால் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஆனால், டிசம்பரில் இருந்து பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியது. இதனால் நீண்ட நாட்களாக வெளிநாட்டு பயணங்களை கிடப்பில் போட்டிருந்த சீன மக்கள் பயணங்களை மேற்கொள்ள ஆவல் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் தான் சீன பயணிகளுக்கு உலக நாடுகள் கெடுபிடி காட்ட சீனா வெகுண்டெழுந்து பதிலுக்கு அதேபோன்று பயணக் கட்டுப்பாடு நடவடிக்கை குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT