Published : 31 Dec 2022 03:31 PM
Last Updated : 31 Dec 2022 03:31 PM
கில்ஜித்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தானில் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கில்ஜித் பல்திஸ்தானில் பொதுமக்களின் நிலங்களை ராணுவம் தொடர்ந்து கைப்பற்றி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எவ்வித இழப்பீடும் தராமல் நிலங்களை ஆக்கிரமிப்பதை பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டும் கில்ஜித் பல்திஸ்தான் மக்கள், இதுவரை 60 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலங்களை அது ஆக்கிரமித்திருப்பதாகக் கூறுகின்றனர்.
கில்ஜித்தில் உள்ள மினவார் என்ற கிராமத்தில் நிலங்களை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் ராணுவம் முயன்றதை அடுத்து, அந்தக் கிராம மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நிகழ்ந்தால் அதற்கு பாகிஸ்திஸ்தான் ராணுவம்தான் பொறுப்பு எனதெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண தலைமைச் செயலாளர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இல்லாவிட்டால், இந்த விவகாரத்தை பாகிஸ்தான் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்திடம் ஏராளமான நிலங்களை தாங்கள் இழந்துவிட்டதாகவும், இனியும் ஒரு அடி நிலத்தையும் இழக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தங்களின் போராட்டத்திற்கு எதிராக ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தினாலும், குண்டுகளை ஏற்போமே தவிர நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மினவார் மக்களின் இந்தப் போராட்டத்திற்கு கில்ஜித் முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது. மேலும், பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சியின் தலைவர் சவுகத் அலி காஷ்மீரி, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் கில்ஜித் பல்திஸ்தான், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் கீழ் இருந்ததாகவும், தற்போது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் தொடர் புறக்கணிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். கில்ஜித் மக்களின் அடிப்படை உரிமைகளை பாகிஸ்தான் அரசு மறுத்து வருவதாகத் தெரிவித்துள்ள சவுகத் அலி காஷ்மீரி, மக்களின் மத உணர்வுகளைத் தூண்டுவதை ஒரு கொள்கையாக பாகிஸ்தான் பின்பற்றி வருவதாக விமர்சித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT