Published : 27 Dec 2022 05:23 AM
Last Updated : 27 Dec 2022 05:23 AM

அதிகாரம், பதவியை இழந்த நிலையில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் கோத்தபய

கொழும்பு: அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அவர் இனி வெளிநாட்டிலேயே வசிக்கப் போவதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவும் பதவி விலகினர்.

கடந்த ஜூலை 9-ம் தேதி கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, அங்கிருந்து வெளியேறினார். மக்கள் போராட்டம் வலுவடைந்ததால் ஜூலை 13-ம் தேதி அவர் மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார். மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்தவாறே அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

ஏறத்தாழ 4 வாரங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றார்.

அவர் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பியபோதிலும், விசா கிடைக்கவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி இலங்கை திரும்பினார்.

கோத்தபய ராஜபக்சவுக்கு, கொழும்புவில் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச வசிக்கும் மாளிகைக்கு அருகே உள்ள அரசு மாளிகை ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளிடம் கடன் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஏராளமான கடனுதவிகளை வழங்கியுள்ளன.

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5,100 கோடி அமெரிக்க டாலர் கடன் பெற்றுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தது. மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சுமார் 290 கோடி அமெரிக்க டாலரை சர்வதேச செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எஃப்) இருந்து கடனாகப் பெறுவதற்கான முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் தங்கியிருந்த கோத்தபய, தனது குடும்பத்தினருடன் நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதை இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கோத்தபய தனது மனைவி அயோமா ராஜபக்ச, மகன் மனோஜ் ராஜபக்ச, மருமகள் செவ்வந்தி ராஜபக்ச மற்றும் பேரன் ஆகியோருடன் நேற்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக அமெரிக்கா சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாலும், அவரது சகோதரரும் மகிந்த ராஜபக்சவும் தற்போது அதிகாரத்தில் இல்லை என்பதாலும் கோத்தபய திடீரென இலங்கையிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரத்தில் இல்லாத நிலையில் அமெரிக்காவிலேயே குடியேறவும் அவர் முடிவு செய்துள்ளதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் உள்ள அவரது நெருங்கிய உறவினர்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரம், செல்வாக்கு, பதவி போன்றவற்றை இழந்த நிலையில், இனி தாய்நாட்டில் வசிக்க வேண்டாம் என்று அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி, இலங்கை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x