Published : 24 Dec 2022 02:58 AM
Last Updated : 24 Dec 2022 02:58 AM

“பணக்காரனாக இருப்பது வாழ்வை வசதியாக்கும், ஆனால்...” - தாத்தாவாகும் மகிழ்ச்சியில் பில் கேட்ஸ்

வாஷிங்டன்: 2022ம் ஆண்டு தனக்கு முக்கியமான விஷயங்களையும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யத் தேவையான விஷயங்களையும் கொடுத்தது என்று பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ். உலக பணக்காரர்களில் ஒருவரான இவர், 2022ம் ஆண்டு குறித்தும் 2023ம் ஆண்டை வரவேற்பது குறித்தும் தனது வலைப்பதிவில் பகிர்ந்துள்ளார். "எங்கள் பேரக்குழந்தைகளுக்குத் தகுதியான எதிர்காலம்" என்ற தலைப்பில் எழுதியுள்ள பில் கேட்ஸ் அதில், "2022ம் ஆண்டு தனக்கு முக்கியமான விஷயங்களையும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யத் தேவையான விஷயங்களையும் கொடுத்தது. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டே அடுத்த ஆண்டை எதிர்நோக்கும் இத்தருணத்தில் என்னை ஆதரிப்பவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்க கடமைப்பட்டுள்ளேன்.

அவர்களே, என்னை ஒரு சிறந்த தந்தையாகவும் நண்பராகவும் இருக்க வைக்கிறார்கள். பணக்காரனாக இருப்பது என் வாழ்க்கையை மிகவும் வசதியாக ஆக்குகிறது, ஆனால் நிறைவானதாக இல்லை. வாழ்வில் நிறைவை பெற எனக்கு குடும்பம், நண்பர்கள் மற்றும் நான் விரும்பும் வேலை தேவை. இந்த மூன்றையும் பெற்றதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

இதேபதிவில் 2023ல் தான் தாத்தா ஆகப்போவதை வெளிப்படுத்தியுள்ள பில் கேட்ஸ், "வயது அதிகமாவதில் உள்ள ஒரு சந்தோஷம், எங்கள் குடும்பத்தில் புதியவர்கள் வரவிருப்பதுதான். ஆம், அடுத்த ஆண்டு நான் தாத்தாவாக உள்ளேன்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து, தன்னுடைய வயதை ஒத்த பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்றுவரும்போது, தான் ஓய்வெடுக்காமல், இன்னும் பணியின் வேகத்தை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளார். "இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நான் தொடங்கிய திட்டத்தில் இன்னும் முழு வேகம் காட்ட உள்ளேன். எனது செல்வங்களை இந்த சமூகத்துக்கு திருப்பித் தரவேண்டும். உலகின் பணக்காரர்களின் பட்டியலில் நான் எந்த இடத்தைப் பிடித்தேன் என்பது எனக்கு கவலையில்லை. எனது செல்வங்களை கொடுக்கும்பட்சத்தில் நான் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறலாம். அது எனக்குத் தெரியும். என்றாலும், எனது பணியின் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு தகுதியான சிறந்த உலகத்தை உருவாக்க நான் உதவ முடியும் என்று நம்புகிறேன்" என்று பில் கேட்ஸ் 2023ம் ஆண்டை வரவேற்கும் பதிவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x