Published : 22 Dec 2022 01:10 PM
Last Updated : 22 Dec 2022 01:10 PM
காபூல்: பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வியை தொடர தலிபன்கள் தடை விதித்துள்ளதால் ஏமாற்றத்துடன் பல பெண்கள் பல்கலைகழகங்களிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது.
தலிபன்கள் உத்தரவில், “மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த உத்தரவை நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபன்கள் அறிவிப்பை கேட்டு, ஆப்கன் பெண்கள் பலர் பல்கலைக்கழக வகுப்பு அறையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இன்று பல்கலைக்கழங்களுக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தச் சூழலில் மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் சிலரும் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலிபன்களின் தடை குறித்து காபூல் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவி ஷாய்ஸ்டா கூறும்போது, "நாங்கள் இன்று பல்கலைக்கழகத்துக்கு சென்றோம். அப்போது நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த தலிபன்கள் எங்களை தடுத்து நிறுத்தி.. அடுத்த அறிவிப்பு வரை நாங்கள் பல்கலைக்கழகத்துக்கு வரக் கூடாது" என்று தெரிவித்தனர்.
மற்றொரு மாணவி ஹசிபா கூறும்போது, "இதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது, இது நம்ப முடியாதது. இது உண்மையாக நடக்கிறது என்றால் என்னால் நம்ப முடியவில்லை" என்றார்.
தலிபன்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தலிபன்கள் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று ஐ.நா. சபை, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT