Published : 22 Dec 2022 09:55 AM
Last Updated : 22 Dec 2022 09:55 AM
வாஷிங்டன்: நீங்கள் செய்வது தானம் அல்ல முதலீடு என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 300 நாட்கள் ஆகிவிட்டது. ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதல்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து ஜெலென்ஸ்கிக்கு வரவேற்பு கொடுத்தார். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள் இது முதலீடு. இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. உக்ரைன் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி. உக்ரைன் ஒருபோது ரஷ்யாவிடம் சரணடையாது" என்றார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. வெறும் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலை தொடுத்த ரஷ்யா இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. உக்ரைன் நிலைகுலைந்தது. இந்தப் போர்தான் உலகிலேயே மிகக் குறுகிய காலம் நடந்த போராக இருக்கும் என்றெல்லாம் போர் நிபுணர்கள் கணித்தனர்.
ஆனால், அடுத்த நாளே நிலைமை மாறியது. அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அமெரிக்காவே தாராளம் காட்டும்போது நேட்டோ உறுப்பு நாடுகள் சும்மா இருக்க முடியுமா என்ன? நேட்டோ உறுப்பு நாடுகளும் ஆயுத உதவி, நிதியுதவி, உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் என தாராளம் காட்டத் தொடங்கின.
‘எங்களை நேட்டோவில் இணைத்துக் கொள்ளுங்கள்’ என்ற கோரிக்கை வைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாளடைவில் அந்த அணியில் இல்லாமலே அந்த அணியில் இருக்கும் உறுப்பு நாடுகள் பெறும் அத்தனை உதவிகளையும் அனுபவிப்பதால் நிம்மதி பெருமூச்சு விடலானார். ஆயுதங்களையும், போர் உத்திகளையும் இலவசமாக அமெரிக்காவில் இருந்து இன்று வரை பெற்றுக் கொண்டிருக்கிறது உக்ரைன். இதனால்தான் கீவ் வரை முன்னேறிய ரஷ்யப் படைகள் வேகமாகப் பின்வாங்கியது. லூஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கார்சேவ் உள்ளிட்ட 4 மாகாணங்களை மட்டும் கையில் வைத்துக் கொண்டு போராடி வருகிறது.
ஆயுதப் பற்றாக்குறையால் உக்ரைனுக்கான ராணுவ தளவாட உதவிகள் குறையும் சூழல் உருவான நிலையில் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT