Published : 17 Dec 2022 07:27 PM
Last Updated : 17 Dec 2022 07:27 PM

பிலாவல் பூட்டோ மீதான இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி மீதான இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச், "குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த படுகொலை குறித்த உண்மைகளை மறைக்க இந்திய அரசு முயல்கிறது. இந்தப் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர்கள் நீதியிலிருந்து தப்பி, இப்போது இந்தியாவில் முக்கிய அரசுப் பதவிகளை வகிக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்தியாவின் ஆளும் கட்சியின் அரசியல் சித்தாந்தமான இந்துத்துவா, வெறுப்பு, பிரிவினை போன்ற சூழலை உருவாக்கியுள்ளது. இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் நோக்கில் தவறு இழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. இது குறித்துதான் பிலாவல் பேசி உள்ளார். அவருக்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான முயற்சி தோல்வி அடைந்துவிட்டதால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இத்தகைய போராட்டங்களை இந்தியா நடத்தியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

பின்னணி: ஐ.நா பாதுகாப்பு அவையில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததை அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, ஐநா பாதுகாப்பு அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்பு படுத்தி கடுமையாக விமர்சித்தார்.

இந்தியா கண்டனம்: பிலாவல் பூட்டோ சர்தாரியின் பேச்சுக்கு வெளியுறவுத்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடு பாகிஸ்தான். ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்த நாடு அது.

லக்வி, ஹபீஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் என ஐ.நா.வால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 126 பேருக்கு அடைக்கலம் கொடுத்து வரும் நாடு பாகிஸ்தான். ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட 27 பயங்கரவாத அமைப்புகளை செயல்பட அனுமதித்திருக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு" என தனது கண்டன உரையில் அவர் குறிப்பிட்டார்.

பாஜக போராட்டம்: நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாஜக நேற்று அறிவித்தது. இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் பிலாவலின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதேபோல், மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x