Published : 16 Dec 2022 09:18 AM
Last Updated : 16 Dec 2022 09:18 AM
நியூயார்க்: "கொல்லைப்புறத்தில் பாம்பை வளர்த்துக் கொண்டு அது பக்கத்துவீட்டுக்காரரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்" என்று பாகிஸ்தானை சரமாரியாக விளாசியுள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கும் இந்தியா 2 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
நேற்று 15-ம் தேதி ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், "இந்த உலகம் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் மையப்புள்ளியாகப் பார்க்கிறது. மேலும் தீவிரவாதம் எங்கிருந்து உருவாகிறது என்பதை சர்வதேச சமூகம் தெரிந்து கொண்டுள்ளது.
இரண்டரை ஆண்டுகளாக கரோனா தொற்று பாதிப்பில் இருந்த நம் அனைவருக்கும் சற்று மூளை மந்தநிலை ஏற்பட்டிருக்கலாம் ஆனாலும் நம் மூளை பயங்கரவாதத்தை தூண்டுபவர்களை மறக்கவில்லை. அதனால் தீவிரவாதத்தை துண்டுபவர்கள் அதனைத் தொடரும் முன் இதனை நன்றாகப் புரிந்து கொள்ளட்டும்.
2011ல் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலாரி கிளின்டன், "நீங்கள் உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் விஷப் பாம்புகளை வைத்துக் கொண்டு அது உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அந்த பாம்பு அதை அங்கே விட்டவர்களையும் கடிக்கும். பாகிஸ்தான் இதுபோன்ற அறிவுரைகளை ஏற்காது என்று தெரியும் என்று பாகிஸ்தான் பயணத்தின் போது சொல்லியிருந்ததை நான் இங்கு நினைவு கூர்கிறேன்" என்றார். ஆகையால் பாகிஸ்தான் திருந்தி ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க வேண்டும் " என்றார்.
அப்போது பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஒருவர், "இன்னும் எத்தனை காலம் தான் பயங்கரவாதம் புதுடெல்லி, காபூல், பாகிஸ்தானில் இருந்து உருவாகிறது என்று தெற்காசியா பார்க்கப்போகிறது " என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர் "இந்தக் கேள்வியை நீங்கள் தவறாக என்னிட்டம் கேட்டுவிட்டீர்கள். இதனை நீங்கள் பாகிஸ்தான் அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். அப்போது தான் அவர்கள் இன்னும் எத்தனை காலம் தான் தாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்க முற்பட்டுள்ளார்கள் என்ற சரியான பதில் சொல்வார்கள் " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சர்வதேச சமூகத்தை முட்டாள் என்று நினைக்க வேண்டாம். இச்சமூகம் எதையும் மறக்கக் கூடியது அல்ல. இது நிச்சயமாக பயஙகரவாதத்தைத் தூண்டும் தேசங்களை விட்டுவைக்காது. அதனால் பயங்கரவாதம் தொடர்பான விவாதங்களை முன்னெடுப்பதால் மட்டும் நீங்கள் உங்கள் தவறுகளை மறைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் யாரையும் இனிமேலும் குழப்ப முடியாது. மக்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. அதனால் நான் சொல்லும் ஆலோசனையைக் கேளுங்கள். இனியாவது திருந்துங்கள். ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சியுங்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT