Published : 14 Dec 2022 03:50 PM
Last Updated : 14 Dec 2022 03:50 PM
வெலிங்டன்: நியூசிலாந்து இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான புதிய தனித்துவமானதும், அதிரடியானதுமான சட்டத்தை நியூசிலாந்து அறிமுகப்படுத்தி உள்ளது.
2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக நியூசிலாந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தப் புதிய சட்டம்படி ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலைப் பொருட்கள் விற்க முடியாது. இதன்படி, சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை நியூசிலாந்து அதிகரிக்கிறது .அதாவது, நியூசிலாந்தில் சிகரெட் வாங்க அந்த நபர் 63 வயது அல்லது அந்த வயதைத் தாண்டிய நபராக இருக்க வேண்டும்.
இதுகுறித்து நியூசிலாந்தின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் ஆயிஷா கூறும்போது, “பாதி மக்களைக் கொல்லும் ஒரு பொருளை விற்க அனுமதிப்பதற்கு எந்த நல்ல காரணமும் இங்கு இல்லை. இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது, எதிர்காலத்தில் நியூசிலாந்தில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று நான் உங்களுக்கு உறுதியாக சொல்ல முடியும்” என்றார்.
ஆனால், இந்தச் சட்டத்தை நியூசிலாந்தின் எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்தச் சட்டத்தால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து எதிர்கட்சியான ஏடிசியின் துணைத் தலைவர் ப்ரூக் வாப் வெல்டன் கூறும்போது, "இந்தச் சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம், ஏனெனில் இது ஒரு மோசமான சட்டம். இது நியூசிலாந்து மக்களுக்கு உகந்ததாக இருக்காது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT