Published : 13 Dec 2022 12:00 PM
Last Updated : 13 Dec 2022 12:00 PM
தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நபரை ஈரான் பொது வெளியில் தூக்கிலிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 15,000 பேர்வரை கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தை பரப்பிய குற்றத்திற்காகவும், பாதுகாப்பு படையினரை கொன்ற குற்றத்திற்காகவும் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு ஈரான் அரசு மரண தண்டனை விதித்துள்ளது. அந்த வகையில் 23 வயதான மஜித்ரேசா என்ற இளைஞருக்கு ஈரான் மரண தண்டனையை பொது வெளியில் நிறைவேற்றியது. ஈரானின் இந்த செயலை அமெரிக்கா கண்டித்ததுடன் ஈரான் தனது சொந்த மக்களை கண்டு பயப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, “இந்த கொடூரமான செயலை நாங்கள் வலுவாக எதிர்க்கிறோம். இந்த கொடூரமான தண்டனைகள் மூலம் ஈரான் மக்களின் கருத்துகளை அடக்க நினைக்கிறது. இது ஈரானிய தலைமை உண்மையில் அதன் சொந்த மக்களுக்கு எவ்வளவு பயப்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று கூறினார்.
இந்த நிலையில் மஜித்ரேசா மரணத்துக்கு நியாயம் வேண்டி சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது எதிர்வினையை பதிவு செய்து வருகின்றனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மஜித்ரேசா மரணம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஈரானிலும் மஜித்ரேசா மரணத்தை எதிர்த்து பலரும் சாலைகளில் பேரணி நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT