Published : 09 Dec 2022 01:23 PM
Last Updated : 09 Dec 2022 01:23 PM
தெஹ்ரான்: ஈரானில் கட்டாய ஹிஜாப்பை எதிர்த்து போராடும் பெண்களின் மீது பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள், “சமீபத்தில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெண்கள் முகங்கள் மீதும், அவர்களது பிறப்புறுப்புகள் மீதும் பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இப்பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறும்போது, “20 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவருக்கு நான் சிகிச்சை அளித்தேன். கிட்டதட்ட 20 பெல்லட் குண்டுகள் அவரது தொடையில் இருந்தன. பிறப்புறுப்புகளில் பெல்லட் குண்டுகள் காணப்பட்டன” என்றார்.
இந்த நிலையில் பெண்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது கண்காணிப்பு காவலர்கள் ( ஹிஜாப்பை பெண்கள் சரியாக அணிகிறார்களா என்பதை சரிபார்க்கும் பெண் காவலர் அமைப்பு) , மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு ஈரான் மரணத் தண்டனை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இதனை போராட்டக்காரர்களின் ஒருதரப்பு நம்பவில்லை. தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...