Published : 06 Dec 2022 06:09 PM
Last Updated : 06 Dec 2022 06:09 PM
சான் பிரான்சிஸ்கோ: அண்மையில் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரம் வேலை செய்யவும், தேவைப்படும் நேரங்களில் அலுவலகத்தில் தங்க வேண்டும் எனவும் எலான் மஸ்க் மின்னஞ்சல் மூலம் சொல்லி இருந்தார். அதன் காரணமாக ட்விட்டர் ஊழியர்கள் சிலர் தாமாகவே முன்வந்து வேலையில் இருந்து விலகினர். ஆனாலும் மஸ்க் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக ட்விட்டர் தலைமையகத்தில் சில அறைகளை ஊழியர்கள் தூங்கும் வகையில் அவர் மாற்றி அமைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நாள் முதல் இப்போது வரையில் நாள்தோறும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவரது பெயர் செய்திகளாகி வருகிறது. ட்விட்டரில் வாரத்திற்கு பல மணி நேரம் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என அவர் கடந்த மாதம் அறிவித்திருந்தார். அதோடு ட்விட்டர் நிறுவனத்தில் அனைத்தும் சரியாகும் வரையில் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ட்விட்டர் தலைமையகத்தில் தான் தூங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சூழலில் அலுவலகத்தில் சில அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஏற்பாடுகளை கண்டு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக பிரபல சர்வதேச பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது தொடர்பான தகவல் எதுவும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அலுவலகத்தில் மிகக் கடுமையாக பணி செய்யும் ஊழியர்களுக்காக இந்த ஏற்பாடு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
படுக்கை அறைகளாக மாற்றப்பட்டுள்ள அறைகளில் சவுகரியமான தூக்கத்திற்கு உத்தரவாதம் இருக்கும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறைகளில் மெத்தை, தரைவிரிப்புகள் மட்டுமல்லாது மேசை மற்றும் நாற்காலிகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் கடின உழைப்பை பெறுவதில் தீவிரம் காட்டி வரும் மஸ்க், ட்விட்டர் தளத்தில் அப்படி என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அண்மையில் ட்விட்டர் நிறுவன புராடெக்ட் பிரிவு தலைவர் எஸ்தர் கிராஃபோர்ட், அலுவலகத்தில் தூங்கியது உலக அளவில் வைரலாகி இருந்தது. ஊழியர்களின் உழைப்பை சுரண்டும் மஸ்கின் இந்த செயல் விமர்சனமும் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT