Published : 05 Jul 2014 09:06 AM
Last Updated : 05 Jul 2014 09:06 AM

ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பிய இலங்கை அகதிகள் 153 பேரின் கதி என்ன?: சட்டத்தை மீறிய செயல் என ஐ.நா. கண்டனம்

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைவதற்காக படகுகளில் சென்ற இலங்கை அகதிகள் 153 பேரும், மீண்டும் இலங்கை கடற்படையினரிடமே ஒப்படைக்கப்பட்டதாக வெளியான தகவலால் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 153 பேர், கடந்த ஏப். 13-ம் தேதி புதுச்சேரி அருகிலிருந்து 2 படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகள் அருகே சென்றபோது, அந்நாட்டு கடற்படையினர் 2 படகுகளையும் தடுத்து நிறுத்தினர். இரு படகுகளிலும் 37 குழந்தைகள், 32 பெண்கள், 84 ஆண்கள் என மொத்தம் 153 பேர் இருந்தனர். தங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையை ஆஸ்திரேலியா ஏற்கவில்லையாம்.

மேலும், அவர்கள் அனைவரையும் புதன்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், ‘இலங்கையில் போருக்குப் பின்னர் மனித உரிமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் இலங்கை அகதிகளை அவர்கள் நாட்டிடமே ஒப்படைத்துள்ளோம். நடுக்கடலில் அகதிகள் வந்த படகுகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ரகசியம் இல்லை. சர்வதேச சட்டங்களை ஆஸ்திரேலியா மதித்து அதன்படியே செயல்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

ஐ.நா. கண்டனம்

இதனிடையே, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான மையம், ‘அகதிகள் வரும் படகை மறிக்கும்போது சர்வதேச சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளரின் கோரிக்கையையும் கருத்தில் கொள்வது அவசியம். ஒரு நாட்டிலிருந்து பயம் காரணமாக வெளியேறுபவரை மீண்டும் அந்த நாட்டுகே வலுக்கட்டாயமாக அனுப்புவது சட்டத்தை மீறும் செயல்’ என்று கவலை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு உத்தரவு

இதனிடையே, தமிழக அரசின் உத்தரவின் பேரில் ‘கியூ’ பிரிவு போலீஸார், தற்போது தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகள் பற்றி முழுமையான விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அகதிகள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவர் என்று தமிழக அகதிகள் முகாமில் உள்ள அவர்களது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கடற்படையினரால் கடலில் மறிக்கப்பட்ட இலங்கை அகதிகள் சென்ற படகு.

இலங்கைக்கு ஆஸி. சான்றிதழ்!

“இலங்கையில் போருக்குப் பின்னர் மனித உரிமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் இலங்கை அகதிகளை அவர்கள் நாட்டிடமே ஒப்படைத்துள்ளோம்.”

- ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x