Published : 27 Dec 2016 12:40 PM
Last Updated : 27 Dec 2016 12:40 PM
ஐக்கிய நாடுகள் சபை அதிகபட்ச அதிகாரத்தை கொண்டிருந்தும், மக்கள் கூடி மகிழும் கிளப் போல செயல்படுவது வருத்தம் அளிக்கிறது என அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றிய பாலஸ்தீன பகுதிகளில் யூத குடியிருப்புகளைக் கட்டக்கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.
அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் தாமதப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தி வந்தார். ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, ட்ரம்ப்பின் ஆலோசனையை புறக்கணித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்காமல் அமெரிக்கா நடுநிலைமை வகித்தது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கட்கிழமை ட்ரம்ப் குறிப்பிடும்போது, "ஐ.நா. அதிகபட்ச அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த அமைப்பு மக்கள் கூடி மகிழும் கிளப் போல செயல்படுவது வருத்தம் அளிக்கிறது" என்று கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த நிலையில், ஐ.நா. சபையின் தடையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் புதிதாக 5,600 வீடுகளைக் கட்ட இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்படும் இதுபோன்ற தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்யும். ஆனால், இந்த முறை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். அதன்படி, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிதாக 5,600 வீடுகளைக் கட்ட அந்த நாட்டு அரசு விரைவில் அனுமதி வழங்க இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT