Published : 01 Dec 2022 05:50 PM
Last Updated : 01 Dec 2022 05:50 PM

மியான்மரில் ஜனநாயகத்திற்கான போராட்டம்: இதுவரை 2,000 பேர் படுகொலை - 'அதிபர்' துவா லஷி லா தகவல்

துவா லஷி லா

பேங்காக்: ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஜனநாயகத்திற்காக போராடிய 2,000 போராட்டக்காரர்கள் இதுவரை கொல்லப்பட்டதாக அந்நாட்டின் 'அதிபர்' துவா லஷி லா தெரிவித்துள்ளார்.

மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவ ஆட்சிக்குழு. இந்நிலையில், ஆங் சான் சூச்சி ஆதரவு தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்திற்காகப் பாடுபடும் பிற தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமை அரசு (NUG) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல் தலைவராக உள்ள துவா லஷி லா தன்னை மியான்மரின் அதிபராக பிரகடனப்படுத்திக் கொண்டார்.

மியான்மரில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இவர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாட்டில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அதன் விவரம்: “மியான்மரில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேசிய ஒற்றுமை அரசு பாடுபட்டு வருகிறது. நாங்கள் ராணுவத்தையும் கட்டமைத்துள்ளோம். எனினும், எங்களை பயங்கரவாதிகளாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. எங்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது என பொதுமக்களை ராணுவ ஆட்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். எனினும், பொதுமக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது.

இந்தப் போராட்டத்திற்காக நாங்கள், எங்கள் உயிரை கொடுக்க வேண்டி இருக்கலாம். அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் என் உயிர் பறிக்கப்படலாம். ஆனால், அது எப்போது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். மியான்மர் ராணுவ அரசு ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று எங்களை தாக்குகிறது. ஆனால், போதிய ஆயுதங்கள் இன்றி நாங்கள் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதுவரை நடந்த சண்டையில் எங்கள் தரப்பில் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். எங்களுக்கு எதிராக போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக மியான்மரில் இருந்து இதுவரை 13 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். எங்களிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தால், ஆறு மாதங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

நட்பு நாடுகள் எங்களுக்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உக்ரைன் பெற்று வருவதைப் போன்ற ஆதரவை நாங்கள் பெற்றிருந்தால், படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கும். ராணுவம் பொதுமக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். அரசியல் அதிகாரத்தை கைவிட ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் முன்வந்தால், அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயார்” என்று துவா லஷி லா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x