Published : 30 Nov 2022 09:08 AM
Last Updated : 30 Nov 2022 09:08 AM

தன்பாலின திருமண சட்ட மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்: பைடன் பெருமிதம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா செனட் சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது.

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெரும் விவாதத்தையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன்பாலின திருமண அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற அச்சம் நிலவியது. இதனைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் செனட் சபையிலும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் ஒரு மாகாணத்தில் தன்பாலின திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களிலும் செல்லுபடியாகும்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், "இன்று செனட் சபையில் திருமணங்களுக்கு மரியாதை சட்டம் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா ஒரு அடிப்படை உண்மையை நிலைநிறுத்தியுள்ளது. அன்பு அன்புதான். அனைத்து அமெரிக்கர்களுக்கும் அவர்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த உண்மை" என்றார். செனட் சபையில் இந்த சட்டத்திற்கு 61 பேர் ஆதரவாகவும் 36 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இந்த சட்டமசோதா பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. அங்கே ஒப்புதல் பெற்று மசோதா பைடன் கையெழுத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

மாற்றத்தை விதைத்த ஒபாமா: அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்த காலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்பாலின திருமணம் செய்து கொள்வது அமெரிக்கா முழுவதும் சட்டபூர்வமானது. முன்பு 36 மாகாணங்களில் மட்டுமே தன்பாலின திருமணம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று நாடு முழுவதும் தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வமான அனுமதியை வழங்கியது. இதையடுத்து மீதமுள்ள 14 மாகாணங்களிலும் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும் நிலை உருவானது. ஆனால் அதன் பின்னர் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கினால் செனட் சபையில் எதிர்ப்பு என மாறி மாறி தடங்கள் வந்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இச்சட்ட மசோதா செனட் சபையில் நிறைவேறியது.

இந்தியாவிலும் நிறைவேறுமா? தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்திய தண்டனைச் சட்டம் 377-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. 158 வருட பழமையான இந்தச் சட்டம் தன்பாலின உறவு கிரிமினல் குற்றம் என்று பட்டியலிட்டிருந்தது. 377 நீக்கத்திற்குப் பின்னர் பரவலாக சமூகத்தில் LGBTQ சமூகத்தினர் மீதான பார்வை மாறிவருகிறது. இந்நிலையில்தான் தன்பாலின உறவாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரும் மனுவில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமெரிக்காவை போல் இந்தியாவிலும் தன்பாலின உறவாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x