Published : 25 Dec 2016 12:09 PM
Last Updated : 25 Dec 2016 12:09 PM
ரஷ்ய ராணுவ விமானம் ஞாயிறன்று கருங்கடலில் விழுந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 92 பேரும் உயிரிழந்தனர்.
சிரியா உள்நாட்டுப் போரில் அந்த நாட்டு அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் போரிட்டு வருகிறது. இதற்காக ரஷ்ய விமானப்படை வீரர்கள் சிரியாவில் முகாமிட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்
அண்மையில் சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளின் தலைமையிடமான அலெப்போ நகரை ரஷ்ய உதவியுடன் அதிபர் ஆசாத் படை கைப்பற்றியது. எனவே இந்த புத்தாண்டை சிரியாவில் உற்சாகமாகக் கொண்டாட ரஷ்ய ராணுவம் திட்டமிட்டது.
இதற்காக ரஷ்ய ராணுவ இசைக் குழுவைச் சேர்ந்த 64 இசைக் கலைஞர்கள், ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 84 பேரை அழைத்துக் கொண்டு டியு-154 ராணுவ விமானம் ரஷ்யாவின் அட்லரில் இருந்து சிரியாவின் லடாகியா விமானப் படைத் தளத்துக்கு நேற்று அதிகாலை புறப்பட்டது. இதில் விமானிகள் உட்பட 8 விமான ஊழியர்களும் இருந்தனர்.
கருங்கடலில் மாயம்
விமானம் புறப்பட்ட 20-வது நிமிடத்தில் கருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து விமானம் மறைந்தது. உடனடியாக கருங்கடல் பகுதிக்கு ரஷ்ய கடற்படையின் 10 போர்க்கப்பல்கள், 5 ஹெலிகாப்டர்கள், ஏராளமான ரோந்து படகுகள் மற்றும் ஆளில்லா விமானம், ஆளில்லா நீர்மூழ்கிகள் ஆகியவை தேடுதல் பணிக்காக அனுப்பப்பட்டன.
பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், விமான விபத்தில் யாரும் உயிர்பிழைக்கவில்லை என்று அறிவித்தது. சம்பவ பகுதியில் இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட நீர்மூழ்கி வீரர்கள் கடலில் மூழ்கி உடல்களை தேடி வருகின்றனர்.
உயர்நிலை விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விசாரணை குழுவினர் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.
விமானத்தின் கருப்பு பெட்டிகளை கைப்பற்றினால் மட்டுமே என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT