Last Updated : 19 Dec, 2016 01:17 PM

 

Published : 19 Dec 2016 01:17 PM
Last Updated : 19 Dec 2016 01:17 PM

போர் நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் அலெப்போவிலிருந்து 350 பேர் வெளியேற்றம்

அலெப்போவில் போர் நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்ட போதிலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 350 பேர் வெளியேற முடிந்தது என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி சிரிய மனித உரிமை ஆணையம் கூறும்போது, "ரஷ்யா, மற்றும் துருக்கி படைகள் மக்கள் வெளியே செல்ல அனுமதி அளித்ததால் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து ஞாயிற்றுக் கிழமை 350 பேர் மீட்கப்பட்டனர்" என்றது.

அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து மக்களை மீட்கச் சென்ற மருந்துவக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அகமத் அல் டிமிஸ் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, "அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து மக்களை மீட்க ஐந்து பேருந்துகள் சென்றிருந்தன. அம்மக்கள் ஆபத்தான நிலையில் இருந்தனர். அவர்கள் உணவு அருந்தாமலும், தாகத்திற்கு தண்ணீர் கூட அருந்த முடியாத நிலையில் இருந்தனர்.

அங்கு இருந்த குழந்தைகளின் உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இயற்கை உபாதைகள் கழிக்கக்கூட செல்ல முடியாத நிலையில் அம்மக்கள் இருந்தனர்" என்று கூறினார்.

முந்தைய தினம் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் அலெப்போ நகரில் இருக்கும் மக்களை மீட்டு வருவதற்காக சென்றன. ஆனால் அங்கு கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டில் உள்ள கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வாகனத்தில் வந்து தாக்குதல் நடத்திய காரணத்தால் மக்களை மீட்டு வரும் முயற்சி கைவிடப்பட்டது.

மேலும் அலெப்போவின் கிழக்கு பகுதியில் மீட்கச் சென்ற பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியதில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டார் என சிரிய மனித உரிமை அமைப்பு கூறியது.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை 100 பேருந்துகள் மக்களை ஏற்றிக் கொண்டு அலெப்போவிலிருந்து வெளியேறியது என சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

முன்னதாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் காரணமாக அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த வெள்ளிகிழமை அமலுக்கு வந்தது. எனினும் சில இடங்களில் சண்டை நிறுத்தத்தை மீறி இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதால் போர் நிறுத்தம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

சர்வதேச பார்வையாளர்கள்

ஐ.நா. பாதுகாப்பு சபை சர்வதேச பார்வையாளர்களை சிரியாவுக்கு அனுப்புவது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வாக்களிக்க உள்ளது.சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஏற்கெனவே அலெப்போவில் மக்கள் வெளியேற்றத்தைக் கண்காணித்து வருகிறது.

சர்வதேச பார்வையாளர்களை அலெப்போவுக்கு அனுப்பும் ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் வாக்கெடுப்பில் ஐ.நாவுக்கான சிரிய தூதர் பஷார் அல் ஜஃபாரி.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று துருக்கி, ஈரான் அரசுடன் சிரியா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x