Published : 25 Nov 2022 01:07 PM
Last Updated : 25 Nov 2022 01:07 PM
பியாங்கியாங்: தென் கொரிய அரசை அமெரிக்காவின் கைக்கூலி என்றும் அதன் அதிபரை முட்டாள் என்றும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் வட கொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்.
வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஜப்பானின் வலியுறுத்தல்படி வட கொரியாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையில் வட கொரியாவின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க தென் கொரியாவும் தயாராகி வருகின்றது. இதுதொடர்பாக தென் கொரியாவும் சில நாட்களுக்கு முன்னர் அறிக்கைவிட்டிருந்தது.
இதனை வட கொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் கைப்பாவை ஐ. நா என வட கொரியா விமர்சித்திருந்தது. இந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் தென் கொரியாவை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “ தொடர்ந்து ஆபத்தான சூழலை உருவாக்கி வரும் தென் கொரிய அதிபர் யுன் சுக் இயோலும் அவரது அரசும் முட்டாள்கள். அமெரிக்கா வழங்கிய எலும்பை நாய் கவ்வுவதுபோல் கவ்விக் கொண்ட தென் கொரிய அரசு, வட கொரியாவுக்கு என்ன தண்டனை வழங்க இருக்கிறது என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன். அமெரிக்கா மற்றும் அதன் கைக்கூலி தென் கொரியா அளிக்கும் பொருளாதாரத் தடைகள் நிச்சயம் எதிர்வினைகளை உருவாக்கும்” என்றார்.
அதிபருக்கு அடுத்ததாக... வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அதிபர் கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். அதிபர் கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார். கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, தன்னுடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கு அரசியலில் முக்கியப் பொறுப்புகள் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் வட கொரியா ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது. வடகொரியாவின் செயலுக்கு பல்வேறு எதிர்வினைகள் எழுந்தும் வட கொரியா தனது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT