Published : 25 Nov 2022 07:38 AM
Last Updated : 25 Nov 2022 07:38 AM

மலேசிய பிரதமராக அன்வர் இப்ராகிம் பதவியேற்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் 10-வது பிரதமராக சீர்திருத்தவாத தலைவர் அன்வர் இப்ராகிம் (75) நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மலேசியாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்வர் இம்ராகிமின் நம்பிக்கை கூட்டணி 82 இடங்களில் வென்றது. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்கள் தேவை. முன்னாள் பிரதமர்முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி 73 இடங்களில் மட்டுமே வென்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதநிலையில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த ஐக்கிய மலாய்ஸ் தேசிய இயக்கம், அன்வர்இப்ராகிம் தலைமையில் ஐக்கிய கூட்டணி அரசை அமைக்க ஆதரவு தெரிவித்தது. இதனால் நாடாளுமன்ற முடக்க பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. மலேசிய அரசியலில் இது யாரும் எதிர்பாராத அரசியல் கூட்டணி. இந்த இரு கட்சிகள் இடையே நீண்டகாலமாக போட்டி இருந்து வந்தது. தற்போது இந்த கட்சிகள் ஒரு அணியில் இணைந்துள்ளன.

இதையடுத்து மலேசிய மன்னரின் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வெற்றியாளர்கள் அனைத்தையும் வெல்வதில்லை. தோல்வியடைபவர்கள் அனைத்தையும் இழப்பதில்லை. அன்வர் இப்ராகிம் தலைமையில் புதிய அரசு அடக்கத்துடன் செயல்பட வேண்டும். மலேசியாவில் நிலையான அரசை உறுதி செய்ய எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மை ஆதரவை பெறும் அன்வர் இப்ராகிம் பிரதமராவதற்கு மன்னர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்’’ என கூறியுள்ளது. இதையடுத்து நாட்டின்10-வது பிரதமராக, அரண்மனையில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் இப்ராகிம் பொறுப்பேற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x