Published : 23 Nov 2022 05:04 PM
Last Updated : 23 Nov 2022 05:04 PM
பீஜிங்: சீனாவைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் அலுவலக அரசியலை தவிர்ப்பதற்காக கல்லறையில் காவலாளியாக பணி செய்வதாக கூறிய பதிவு வைரலாகியது.
சீனாவில் இளைஞர்களிடம் பிரபலமாக இருப்பது டிக் டாக். டிக் டாக்கில் தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர சீனர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், டிக் டாக்கில் டான் (22) என்ற இளம்பெண் ஒருவர் பகிர்ந்த புகைப்படமும், பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அப்படி டான் என்ன பதிவிட்டிருக்கிறார் என்று கேட்கிறீர்களா? தனது டிக் டாக் பக்கத்தில் சீனாவின் சோங்கிங் பக்கத்தில் உள்ள கல்லறை ஒன்றின் புகைப்படத்தைதான் அவர் பகிர்ந்திருக்கிறார். ஆனால், அவர் கூறிய தகவல் இன்றைய தலைமுறைக்கு சற்று புதிதாக இருந்தது.
அதில் “உங்களுக்கு எனது பணியின் சூழலை காண்பிக்கப் போகிறேன். இங்கு நாய்கள், பூனைகளுடன் இணையமும் உள்ளது. இங்கு எந்த அலுவலக அரசியலும் கிடையாது. நான் இங்குதான் வாழ்கிறேன். இங்கு வரும் விருந்தினர்களை நான் கவனித்து கொள்கிறேன். இறந்தவர்களின் உறவினர்கள் சார்பாக கல்லறைகளை சுத்தப்படுத்தி பூக்களால் அலங்கரிக்கிறேன். காலையில் 8.30 மணிக்கு ஆரம்பிக்கும் என் பணி 5 மணிக்கு முடிவடையும். இடையில் 2 மணி நேரம் எனக்கு உணவு இடைவேளை” என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்பணிக்காக இந்திய மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய்யை சம்பளமாக பெறுகிறார் டான். டானின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டனர்.
அதில் சிலர், “எனக்கும் இந்த வேலை பிடித்திருக்கிறது. நீங்கள் மனிதர்களை சந்திக்க வேண்டிய அவசியமில்லை”. “முன்புதான் இம்மாதிரியான பணிகள் துரதிர்ஷ்டம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த நவீன உலகில் இதுதான் அமைதியானது” என்று பதிவிட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT