Published : 22 Nov 2022 03:01 PM
Last Updated : 22 Nov 2022 03:01 PM
கேன்பெர்ரா: இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்தார். இதேபோல், பிரிட்டன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. நேற்று (திங்கள்கிழமை) ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் அவையில் எளிதாக நிறைவேறியதை அடுத்து, இன்று செனட் அவை இதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்திலும், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. அதேவேளையில், ஆஸ்திரேலியா உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இந்திய அரசு வலிமையான உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளதாக ஆஸ்திரேலியா வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பந்தம் குறித்து விவாதித்தார். ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் அல்பானீஸ் அப்போது கூறியிருந்தார்.
சீனா உடனான ஆஸ்திரேலியாவின் உறவு சுமுகமானதாக இல்லாததால், அந்நாட்டிற்கான ஏற்றுமதி சிக்கல் நிறைந்ததாக உள்ளது. இதனால், தனது உற்பத்தியை இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த ஒப்பந்தத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆஸ்திரேலியா பார்க்கிறது.
ஆஸ்திரேலியா - பிரிட்டன் இடையேயான முந்தைய ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியாவின் 99% பொருட்களை அந்நாடு வரி இன்றி பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த ஒப்பந்தம் முழுமையடையும்போது 100 சதவீத பொருட்கள் வரிவிலக்கு பெறும். பிரிட்டனுக்கு ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, பால் பொருட்கள், சர்க்கரை, ஒயின் உள்ளிட்ட பொருட்களை ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்து வருகிறது. இதேபொருட்களை இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா 90% வரியுடன் ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT