Last Updated : 05 Dec, 2016 07:06 PM

 

Published : 05 Dec 2016 07:06 PM
Last Updated : 05 Dec 2016 07:06 PM

ஒபாமாவிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை: எட்வர்டு ஸ்னோடன்

அமெரிக்கா குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன், தான் ஒபாமா அரசிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

யாஹூ நியூஸ் வெளியிட்ட செய்திகளின்படி, ஸ்னோடன் தெரிவித்தபோது, “நான் மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை” என்றார்.

9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க உளவுத்துறை அனைத்து தரப்பினர் மீதும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் மீதான கண்காணிப்பு பற்றிய தகவல்களை 2013-ம் ஆண்டு கசியவிட்டார் எட்வர்ட் ஸ்னோடன். இதனையடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்ற தருணத்தில் ரஷ்யாவில் அவர் அடைக்கலம் கேட்டு புகுந்துள்ளார்.

அவர் மீது தேசத்துக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டு உள்ளதால் 30 ஆண்டுகள் அவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஒபாமா தனது பதவியிலிருந்து இறங்குவதற்குள் ஸ்னோடனுக்கு மன்னிப்பு பெற்று தர வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் முயற்சி செய்து வருகின்ரனர்.

‘முழுமையான துரோகி’ என்ற பட்டம்:

ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, “அவர் (ஸ்னோடன்) ஒரு முழுமையான துரோகி, நான் அவரை கடுமையாகவே நடத்துவேன்” என்று கூறியிருப்பது இங்கு நினைவுகூரத் தக்கது.

நீதித்துறையிடம் தான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று கூறும் வாய்ப்பளித்தால் அமெரிக்காவுக்கு திரும்பத் தயாராக இருப்பதாக ஸ்னோடன் தெரிவித்தார். ஆனால் சதி வழக்கில் இவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அந்த வாய்ப்பு இவருக்குக் கிடைக்கப்போவதில்லை.

இந்நிலையில் ஒபாமா கூறியது பற்றி ஸ்னோடன் நம்பிக்கை தெரிவிக்கையில், “இதனை அவர் புரிந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன். மேலும் அவரது சமீபத்திய கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது, எனது செயல்பாடுகள், இவ்வகை பத்திரிகை தர்மம் ஆகியவை நியாயமான கவலைகளை எழுப்பியுள்ளதாக ஒபாமா புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்” என்றார்.

அரசின் செயல்பாடுகள் எல்லை மீறி கட்டுப்பாடுகளின்றி செல்லும் போது இத்தகைய பத்திரிகை தர்மம் முக்கியமானது என்றே கருதுகிறேன். சில விஷயங்கள் தவறாகச் செல்லும்போது நாம் அதற்கு எதிராக எழுந்து நிற்க விரும்ப மாட்டோமா என்ன? என்று கேள்வி கேட்டுள்ளார் ஸ்னோடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x