Published : 20 Nov 2022 02:27 PM
Last Updated : 20 Nov 2022 02:27 PM
சான் ஃப்ரான்சிஸ்கோ: 22 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று யோசனை கோரி ட்விட்டர் தளத்தில் வாக்கெடுப்பை நடத்தினார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். வெள்ளிக்கிழமை அவர் வாக்கெடுப்பை தொடங்கினார். 24 மணி நேரம் வாக்கெடுப்பு நடந்த நிலையில் ட்விட்டரில் 237 மில்லியன் வாடிக்கையாளர்களில் 15 மில்லியன் பேர் வாக்களித்திருந்தனர். இதில் 48.2 சதவீத பேர் ட்ரம்புக்கு எதிராகவும் 51.8 சதவீதம் பேர் ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். இந்நிலையில் அவர் மக்கள் ஆதரவைப் பெற்றதால் அவர் மீதான ட்விட்டர் தடை நீக்கப்பட்டது.
இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மக்கள் தீர்ப்பே, இறைவனின் தீர்ப்பு. மக்கள் வாக்களிப்பின்படி ட்ரம்ப் மீதான தடை நீக்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
The people have spoken.
Trump will be reinstated.
Vox Populi, Vox Dei. https://t.co/jmkhFuyfkv— Elon Musk (@elonmusk) November 20, 2022
என்னைப் போலவே அவரும் இருக்கிறார்.. இந்நிலையில் இது குறித்து ட்ரம்ப் லாஸ் வேகாஸில் பேசுகையில், ”எனக்கு அவரைப் பிடிக்கும். அவர் ஒரு வாக்கெடுப்பை நடத்தினார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் என்னிடம் இப்போது ட்ரூத் சோசியல் உள்ளது. இப்போதைக்கு ட்விட்டரில் செயல்படுவதற்கான அவசியம் எனக்கு எழவில்லை” என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் மீது தடை விதிக்கப்பட்டது ஏன்? அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் அதிபராக முடியும். முதல் முறை அதிபராக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார். அப்படிப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்களே மிகுதி. சமீப காலத்தில் வெற்றியைத் தவறவிட்டவர்கள் மூன்று பேர். ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் டபிள்யூ புஷ் வரிசையில் டொனால்டு ட்ரம்ப் இணைந்தார்.
அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. அந்தப் போராட்டங்களின் போது ட்ரம்ப் சமூக வலைதளங்கள் வாயிலாக வெறுப்பை விதைத்ததாகக் கூறி பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்தன. அதன் பின்னர் ட்ரம்ப் தனக்கென்று தனியாக ட்ரூட் சோஷியல் என்றொரு சோஷியல் மீடியா தளத்தையும் தொடங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT