Published : 16 Nov 2022 04:32 PM
Last Updated : 16 Nov 2022 04:32 PM

இந்தியத் தலைமையின் கீழ் ஜி-20 தீர்க்கமும் செயல் வல்லமையும் கொண்டிருக்கும்: பிரதமர் மோடி உறுதி

பாலி: இந்திய தலைமையின் கீழ் ஜி-20 கூட்டமைப்பானது ஒருங்கிணைந்ததாகவும், லட்சியம், தீர்க்கம் மற்றும் செயல் வல்லமை கொண்டதாகவும் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டு காலமாக இந்தோனேஷியா வசம் இருந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இன்று இந்தியா வசம் வந்துள்ளது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் தலைமை மாற்றத்திற்கான நடைமுறை நிகழ்வுகள் அரங்கேறின. இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, தலைமைப் பொறுப்பை பிரதமர் மோடி வசம் ஒப்படைத்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: “இந்திய தலைமையின் கீழ் ஜி-20, ஒருங்கிணைந்ததாகவும், லட்சியமும், தீர்க்கமும், செயல் வல்லமையும் கொண்டதாகவும் இருக்கும். உலகிற்கு உத்வேகத்தையும், ஒருங்கிணைந்த செயல்பாட்டையும் வழங்கக்கூடியதாக ஜி-20 இருக்கும் வகையிலான பணிகளை இந்தியா மேற்கொள்ளும்.

இயற்கை வளங்கள் மீதான தனி உடமை சிந்தனைதான் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அடிப்படைக் காரணம். இயற்கை வளங்கள் நமக்கு சொந்தமானவை என்ற எண்ணத்திற்கு மாறாக, இயற்கை வளங்களுக்கு நாம்தான் பொறுப்பு என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலமே சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். பாதுகாப்பான உலகை உருவாக்க இந்த எண்ணம் மிகவும் முக்கியம்.

புவிசார் அரசியல் பதற்றம், பொருளாதார பின்னடைவு, உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம், கரோனா பெருந்தொற்று என உலகம் பல்வேறு சவால்களை சந்திக்கும் தருணத்தில் இந்தியா ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது. அதேநேரத்தில், உலகம் ஜி-20 கூட்டமைப்பை நம்பிக்கையோடு பார்க்கிறது. வளர்ச்சியின் பலன் அனைத்து மனிதர்களுக்கும் கிடைப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும். பெண்கள் இல்லாமல் உலக வளர்ச்சி சாத்தியமில்லை. ஜி-20 கூட்டமைப்பின் செயல்திட்டத்திலும் பெண்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அமைதியும் பாதுகாப்பும் இல்லாவிட்டால், எதிர்கால சந்ததியினரால் பொருளாதார வளர்ச்சியையும், தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் தொடர்ந்து உறுதிப்படுத்த முடியாது. அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு ஜி-20 மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. ஜி-20 தலைமையை ஏற்கும் இந்தியா, ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் எனும் தனது விரிந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் செயல்படும்.

ஜி-20 தலைமையை இந்தியா ஏற்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைகொள்ள வைக்கிறது. நாங்கள் ஜி-20 கூட்டங்களை எங்கள் நாட்டின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாநகரங்களில் நடத்த உள்ளோம். இந்தியாவின் பன்முகத்தன்மை, ஒருங்கிணைக்கும் பாரம்பரியம், கலாச்சார செழுமை ஆகியவற்றை எங்கள் நாட்டிற்கு வர இருக்கும் விருந்தினர்கள் நிச்சயம் உணருவார்கள்.

ஜனநாயகத்தின் தாயாக திகழும் இந்தியாவின் தனித்துவ கொண்டாட்டங்களில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உலகை மாற்றும் சக்தியாக நாம் அனைவரும் இணைந்து ஜி-20 கூட்டமைப்பை மாற்றுவோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x