Published : 16 Nov 2022 04:28 AM
Last Updated : 16 Nov 2022 04:28 AM
பாலி: இந்தோனேசியாவில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். ஜி-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருள் விநியோகத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்ககூடாது என்று வலியுறுத்தினார்.
ஜி-20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், செனகல் அதிபரும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவருமான மேக்கி சால், நெதர்லாந்து அதிபர் மார்க் ரூட் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார். ரிஷி சுனக், இமானுவல் மேக்ரான் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்றும் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுடனும், பிரதமர் மோடி இன்று பேசுகிறார்.
ஜி-20 உச்சி மாநாட்டில் உணவு, எரிசக்தி பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
முன்னேறும் இந்தியா: உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், உலகளாவிய வளர்ச்சிக்கு, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிக முக்கியம். அதனால், எரிபொருள் விநியோகத்தில் எந்தவித கட்டுப்பாடுகளையும் ஊக்குவிக்க கூடாது. எரிபொருள் சந்தையில் நிலைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
சுத்தமான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலை உருவாக்குவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் மின் உற்பத்தியில் பாதியளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்கும். அதனால், முழுமையான எரிசக்தி மாற்றத்துக்கு, வளரும் நாடுகளுக்கு தேவையான நிதி, தொழில்நுட்பத்தை சரியான நேரத்தில் வழங்குவது அவசியம்.
ஜி-20 மீதான எதிர்பார்ப்பு: உலகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஏழைகள் கடும் சவால்களை சந்திக்கின்றனர். பாதிப்புகளை சமாளிக்க தேவையான நிதி, ஏழைகளிடம் இல்லை. இதுபோன்ற பிரச்சினைகளை ஐ.நா. போன்ற அமைப்புகளால் தீர்க்க முடியவில்லை. அதனால், முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்பிடம் இருந்து, இன்றைய உலகம் அதிகம் எதிர்பார்க்கிறது.
உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க நாம் வழி காண வேண்டும் என தொடர்ந்து கூறிவருகிறேன். கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அப்போதைய தலைவர்கள் அமைதிக்கு அதிக முயற்சிகள் எடுத்தனர். அதை நாம் இப்போது செய்ய வேண்டும். உலகில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான திடமான தீர்வை நாம் காண வேண்டும். கரோனா தொற்றுக்கு பிறகு, புதிய உலகை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.
அடுத்த ஆண்டு ஜி-20 கூட்டம் கவுதம புத்தர் மற்றும் மகாத்மா காந்தி பிறந்த புனித பூமியான இந்தியாவில் நடைபெறும்போது, உலகுக்கு அமைதி என்ற வலுவான தகவலை நாம் ஒருங்கிணைந்து அறிவிப்போம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க கூடாது என மேற்கத்திய நாடுகள் வலியுறுத்திய நிலையில், எரிபொருள் விநியோகத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் கூடாது என ஜி-20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடிபேசியது குறிப்பிடத்தக்கது.
ஜி-20 மாநாட்டு நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அத்தனோம் பேசியபோது, ‘‘அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக உலகளாவிய பாரம்பரிய சுகாதார மையம் அமைப்பதில் ஆதரவு அளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT