Published : 15 Nov 2022 08:37 PM
Last Updated : 15 Nov 2022 08:37 PM

உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிரதமர் மோடி

பாலி: “உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, தூதரக வழியில் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாடு தொடங்கி உள்ளது. இதில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த முதலாவது அமர்வில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்: “சவாலான சர்வதேச சூழலியலில் ஜி-20 மாநாட்டிற்கு சிறப்பான தலைமைத்துவத்தை அளிக்கும் அதிபர் ஜோகோ விடோட்டோவிற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பருவநிலை மாற்றம், கரோனா பெருந்தொற்று, உக்ரைனில் நடைபெறும் மாற்றங்கள் அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்சினைகள் என இவை அனைத்தும் உலகம் முழுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.

சர்வதேச விநியோக சங்கிலிகள் அழிந்து வருகின்றன. அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவை உள்ள பொருட்களுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைத்து நாடுகளின் ஏழை குடிமக்கள் சந்திக்கும் சவால்கள் இன்னும் மோசமாகி உள்ளது. அன்றாட வாழ்வு அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு போராட்டம் நிறைந்தது. இரட்டை சோதனைகளை எதிர்கொள்ளும் நிதித்திறன் அவர்களிடம் இல்லை.

ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு அமைப்புகளும் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக் கொள்ள நாம் தயங்கக் கூடாது. இதற்கான தகுந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவர நாம் அனைவரும் தவறிவிட்டோம். எனவே இன்று ஜி-20 மாநாட்டின் விளைவுகள் குறித்து உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, நமது குழு அதிக முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, தூதரக வழியில் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். கடந்த நூற்றாண்டில் இரண்டாவது உலகப் போர், சர்வதேச அளவில் சீரழிவை ஏற்படுத்தியது. போருக்குப் பிறகு, அப்போதைய தலைவர்கள் அமைதியை ஏற்படுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது நமது முறை. கோவிட் காலகட்டத்திற்குப் பிறகு புதிய உலக ஒழுங்குமுறையை உருவாக்கும் பொறுப்பு நம் கையில் உள்ளது. உலகெங்கும் அமைதி, இணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, நிலையான மற்றும் கூட்டு உறுதிப்பாடுகள், காலத்தின் தேவை.

புத்தர் மற்றும் காந்தி பிறந்த புனித பூமியில் ஜி- 20 கூட்டம் அடுத்த ஆண்டு நடைபெறும்போது அமைதி குறித்த வலுவான செய்தியை உலகிற்கு தெரிவிக்க நாம் அனைவரும் ஒப்புக் கொள்வோம் என்று நான் நம்புகிறேன்.

பெருந்தொற்றான் போது தனது 1.3 பில்லியன் மக்களுக்கு உணவு பாதுகாப்பை இந்தியா உறுதி செய்தது. அதே நேரத்தில் பல்வேறு நாடுகளுக்கு உணவு தானியங்களும் விநியோகிக்கப்பட்டன. இன்றைய உர தட்டுப்பாடு தான் நாளைய உணவு தட்டுப்பாட்டிற்கு வித்திடும். இது நடக்கும் போது இதற்கான தீர்வு உலக நாடுகளிடம் இருக்காது. உரம் மற்றும் உணவு தானியங்களின் விநியோக சங்கிலியை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கான பரஸ்பர ஒப்பந்தத்தை நாம் மேம்படுத்த வேண்டும்.

நிலையான உணவு பாதுகாப்பிற்காக இந்தியாவில் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஊக்குவிப்பதோடு, சிறு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து மிக்க மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களையும் மக்களிடையே மீண்டும் பிரபலப்படுத்துகிறோம். உலகளாவிய ஊட்டச்சத்து குறைபாடு, பசி ஆகிய பிரச்சனைக்கு சிறுதானியங்கள் தீர்வாக அமையலாம். சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை அடுத்த வருடம் மிகுந்த உற்சாகத்தோடு நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.

உலகளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியம். எரிசக்தி சந்தையில் ஆற்றல் மற்றும் நிலைத்தன்மையின் விநியோகத்திற்கு எந்த கட்டுப்பாடுகளையும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. தூய்மையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் என்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது. 2030-ஆம் ஆண்டில், நமது மின்சாரத்தில் சுமார் பாதி அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும். கால நிர்ணயம் மற்றும் மலிவான நிதி மற்றும் தொழில்நுட்பத்தின் நிலையான வழங்கல் ஆகியவை உள்ளடக்கிய ஆற்றல் மாற்றத்திற்கு அவசியம்.

ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கும் போது இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் சர்வதேச அளவில் தீர்வுகள் ஏற்படுத்துவதற்கான பணிகளை நாம் மேற்கொள்வோம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x