Published : 14 Nov 2022 04:22 AM
Last Updated : 14 Nov 2022 04:22 AM

44 வீடுகள், பள்ளி, தேவலாயம் உள்ள ஸ்பெயின் கிராமத்தின் விலை ரூ.2.1 கோடி

மாட்ரிட்: சால்டோ டி காஸ்ட்ரோ. ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கிராமம். ஸ்பெயினுக்கும் போர்ச்சுக்கல் நாட்டுக்கும் இடையில் இந்தக் கிராமம் அமைந்திருக்கிறது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து மூன்று மணி நேர பயணத்தில் இந்தக் கிராமத்தை அடைந்துவிடலாம். 44 வீடுகள், ஒரு விடுதி, ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நீச்சல் குளம் உள்ள இந்தக் கிராமம் தற்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. விலை 260,000 யூரோ. இந்திய மதிப்பில் ரூ.2.1 கோடி.

இந்தக் கிராமம் உருவான கதை சுவாரஸ்யமானது. 1950-களில் மின் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இக்கிராமத்தின் அருகே அணைக்கட்டு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஊழியர்கள் தங்கி பணிபுரிவதற்காக அந்நிறுவனம் இங்கு வீடுகளைக் கட்டியது. அவர்களின் தேவைக்காக பள்ளி, தேவாலயம், நீச்சல் குளம் உள்ளிட்டவை கட்டப்பட்டன. அந்நிறுவனத்தின் பணி முப்பது ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. மொத்தப் பணியும் முடிந்த பிறகு ஊழியர்கள் அந்தக் கிராமத்தில் தொடர்ந்து தங்க வேண்டிய தேவை இல்லாமல் போனது. அனைவரும் அந்தக் கிராமத்தைக் காலி செய்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். இதனால், 1980-க்குப் பிறகு அந்த கிராமம் தனித்துவிடப்பட்டது.

இந்தச் சூழலில் 2000-களின் தொடக்கத்தில் ஒருவர் இந்தக் கிராமத்தை சுற்றுலாத்தளமாக மாற்றும் நோக்கில் விலை கொடுத்து வாங்கினார். இதற்கிடையே ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அவரால் அந்தக் கிராமத்தை தான் விரும்பியபடி சுற்றுலாத்தளமாக மாற்ற முடியவில்லை. அதனால், அந்தக் கிராமத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். ஒரு கட்டத்தில், இனி அந்தக் கிராமத்தை வைத்து தான் ஒன்றும் செய்வதற்கில்லை என்பதை உணர்ந்த அவர், அதை விற்க முடிவு செய்தார். அந்தக் கிராமத்தின் விலை 6.5 மில்லியன் யூரோ (ரூ.54 கோடி) என்று அறிவித்தார். தனித்துவிடப்பட்ட, போதிய வசதிகள் இல்லாத கிராமத்தை அந்தத் தொகை கொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், தற்போது அந்தக் கிராமத்தை வெறும் 260,000 யூரோவுக்கு (ரூ.2.1 கோடி) விற்பதாக அறிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் ரியல் எஸ்டேட் தளத்தில் இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ‘நான் நகரவாசியாக உள்ளேன். என்னால் அந்தச் சொத்தை பராமரிக்க முடியவில்லை. அதனால் விற்கிறேன்’ என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்யா என வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 பேர் இந்தக் கிராமத்தை வாங்க விரும்பம் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் மொத்த பணத்தையும் செலுத்தி இந்தக் கிராமத்தை வாங்க முன்பதிவும் செய்துவிட்டார்.

2 மில்லியன் யூரோ (ரூ.16.6 கோடி) முதலீடு செய்தால் இந்தக் கிராமத்தை சுற்றுலாத்தளமாக மாற்ற முடியும் என்று அந்த ரியல் எஸ்டேட் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x