Published : 30 Nov 2016 12:31 PM
Last Updated : 30 Nov 2016 12:31 PM
உலகிலேயே அதிக வயதான நபராகக் கருதப்படும் இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரானோவின் (117) உணவு பழக்கவழக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
ரைட் சகோதரர்கள் விமானத்தில் பறந்த அந்த வரலாற்று நிகழ்வு நடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் பிறந்த எம்மா மொரானோவுக்கு தற்போது வயது 117.
உலகிலேயே வயதான நபராகக் கருதப்படும் எம்மா 1899ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தவர். தனது வாழ்நாளில் மூன்று நூற்றாண்டுகளைக் கடந்தவர். இரண்டு உலகப் போர்களை கண்டவர். கிட்டத்தட்ட 90 இத்தாலிய அரசுகளைச் சந்தித்தவர். இவ்வாறு பல சாதனைகளுக்கு உரியவரான எம்மா செவ்வாய்க்கிழமை தனது 117வது பிறந்த நாளை கொண்டாடி முடித்துள்ளார்.
எம்மாவின் அக்கம்பக்கத்தினரும், நண்பர்களும் இணைந்து வெகு விமரிசையாக எம்மாவின் பிறந்த நாளை வெர்பானிய நகரத்தில் உள்ள அவரது சிறிய குடியிருப்பில் கேக் வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளனர்.
எம்மாவின் போராட்டமான வாழ்க்கை:
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு தனது சாய்வு நாற்காலியில் ஜன்னலின் ஒரம், வெள்ளை சால்வையை அணிந்து எம்மா, ராய்ட்டர்ஸ் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், "எனது வாழ்க்கை நான் எதிர்பார்த்தபடி நன்றாக அமையவில்லை. நான் எனது 65-வது வயதுவரை தொழிற்சாலையில் பணிபுரிந்தேன்" என்றார்.
மேலும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எம்மா பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், அவரது கணவர் இரண்டாவது உலகப் போரின்போது மரணமடைந்ததாகவும், தான் விரும்பாத ஒருவரை 2-வது திருமணம் செய்து கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பேட்டியில், "என்னை நீ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அந்த நபர் மிரட்டினார். எனது இரண்டாவது திருமணத்தின்போது எனக்கு வயது 26. அந்தத் திருமணம் எனக்கு மகிழ்ச்சியானதாக அமையவில்லை. 1937-ம் ஆண்டு எனக்கு மகன் பிறந்தான். 1938-ம் ஆண்டு எனது கணவரை விட்டுப் பிரிந்தேன். இத்தாலியில் அந்தக் காலத்தில் அந்தச் செயலை செய்த ஒரே பெண் நானாகத்தான் இருந்திருக்க முடியும்" என்று நினைவுகூர்ந்தார் எம்மா.
கணவரின் பிரிவுக்குப் பிறகு எம்மா தனியாக வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார். எம்மாவுக்கு 8 சகோதரர்கள், சகோதரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் 102 வயதில் இறந்திருக்கிறார்.
எம்மாவின் ஆரோக்கியத்துக்கு காரணமாக அவரது மருத்துவர் கர்லோ பாவா கூறியதாவது, "எம்மா காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவதில்லை. அவரது பிரதான உணவு முட்டைதான்.
ஒரு நாளைக்கு மூன்று முட்டைகளை எம்மா சாப்பிடுகிறார். அவற்றில் இரண்டை பச்சையாகவும், ஒன்றை சமைத்தும் சாப்பிடுகிறார். அவரின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு சில நாள் முட்டையின் அளவு மாறுபடலாம். இந்த உணவுப் பழக்கத்தையே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு வருடமும் எம்மா பின்பற்றுகிறார்" என்று கூறினார்.
இத்தாலியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையினால், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், அதே இத்தாலியில் வாழ்வின் பல போராட்டங்களைக் கடந்து பெண்களின் சக்தியை 117 வயதிலும் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார் எம்மா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT