Published : 09 Nov 2022 02:44 PM
Last Updated : 09 Nov 2022 02:44 PM
பெய்ஜிங்(சீனா): ராணுவம் தனது பயிற்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், எத்தகைய போரையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கூட்டு ராணுவ தலைமையகம் அமைந்துள்ள மத்திய ராணுவ ஆணையகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் ஜி ஜின்பிங் இந்த உத்தரவை பிறப்பித்ததாக ஆஸ்திரேலியாவின் 'ஸ்கை நியூஸ்' தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் முன் உள்ள பல்வேறு சவால்களை முறியடிக்கவும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் வலியுறுத்தி இருப்பதாகவும் 'ஸ்கை நியூஸ்' தெரிவித்துள்ளது.
இதேபோல், சீன அரசு தொலைக்காட்சியான சிசிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ பயிற்சியை ஒருங்கிணைந்த முறையில் வலுப்படுத்த வேண்டும் என்றும், எத்தகைய போருக்கும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அதிபர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது. போர் புரிவதற்கும், வெற்றியை உறுதி செய்வதற்கும் ஏற்ற வகையில் ராணுவம் தனது ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளதாக சீன அரசின் ஊடகமான ஜின்ஜூவாவும் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சீன ராணுவம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
தங்கள் நாட்டின் அங்கம் தைவான் என சீனா கூறி வருகிறது. எனினும், தன்னை முழுமையான இறையாண்மை மிக்க தனி நாடாக தைவான் அறிவித்து செயல்பட்டு வருகிறது. தைவானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தைவானை ஆக்கிரமிக்க சீனா முயலுமானால், அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கும் என அது அறிவித்துள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகைக்குப் பிறகு சீனா - தைவான் உறவு மேலும் சிக்கலாகி உள்ளது.
தைவானை தங்களுக்கு எதிராக திருப்பி அதன்மூலம் அச்சுறுத்தல் விடுக்கும் போக்கிற்கு முடிவு கட்ட சீன அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீன அதிபராக ஜி ஜின்பிங் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடருவார் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தைவானை முழுமையாக இணைத்துக்கொள்ள இதுவே உகந்த தருணம் என சீனா கருதுவதாகக் கூறப்படுகிறது. சீன அதிபரின் பேச்சு, இதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT