Published : 08 Nov 2022 08:45 PM
Last Updated : 08 Nov 2022 08:45 PM
கீவ்(உக்ரைன்): ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியம் உள்ளதாக உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியமே இல்லை என இதுவரை கூறி வந்த ஜெலன்ஸ்கி, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
நோட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முயன்றதை அடுத்து, அதை தடுக்க ரஷ்யா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இது தொடர்பாக அந்நாட்டுடன் ரஷ்யா, பெலாரஸ் மற்றும் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. 8 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில், உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அளிக்கும் பொருளாதார, ஆயுத உதவிகளைக் கொண்டு உக்ரைன், ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கும், செனட்டில் மொத்தமுள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் இன்று (நவ.8) தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால், அது அதிபர் ஜோ பைடனுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிகளை தொடருவதில் சிக்கல் ஏற்படலாம்.
இந்தச் சூழல் காரணமாகவே, ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி பச்சைக் கொடி காட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், பேச்சுவார்த்தைக்கு அவர் நிபந்தனை விதித்துள்ளார். உக்ரைனிடம் இருந்து வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும், போர் காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனும் நிபந்தனைகளை ஜெலன்ஸ்கி வைத்துள்ளார்.
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை. அதேநேரத்தில், உக்ரைனின் நிபந்தனைகளை ரஷ்யா ஏற்க வாய்ப்பில்லை. இந்தச் சூழலில், பேச்சுவார்த்தை தொடங்கப்படுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எனினும், உக்ரைனின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT