Published : 08 Nov 2022 05:10 PM
Last Updated : 08 Nov 2022 05:10 PM

ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மிகவும் வலிமையானது: மாஸ்கோவில் ஜெய்சங்கர் விவரிப்பு

ரஷ்யாவில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

மாஸ்கோ (ரஷ்யா): ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மிகவும் வலிமையானது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து முதல்முறையாக அந்நாட்டிற்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தலைநகர் மாஸ்கோவில் வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெய்சங்கர் கூறியது: “ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மிகவும் வலிமையானது. செர்கி லாரோவை இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5 முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். எங்கள் சந்திப்புகளின்போது, நீண்ட காலமாக தொடரும் இருதரப்பு உறவு குறித்தும், இரு நாடுகளையும் பிணைக்கும் அம்சங்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம்.

இந்தியா அரசும் ரஷ்ய அரசும் பல்வேறு மட்டங்களில் தொடர்ச்சியான வலிமையான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை கடந்த செப்டம்பர் மாதம் சமர்கண்ட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது நான் மாஸ்கோ வந்திருக்கிறேன். ரஷ்யாவுடனான இரு தரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

செர்கி லாரோவ் உடனான இன்றைய சந்திப்பின்போது, இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்கள் குறித்தும், சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் கொண்டிருக்கும் பார்வைகள் குறித்தும், இவற்றில் இரு நாடுகளின் நலன்கள் குறித்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். இரு நாடுகளும் தத்தமது இலக்குகளை எந்த அளவுக்கு எட்டியுள்ளன என்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.

உக்ரைன் மோதலின் தொடர் விளைவுகளை நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். பயங்கரவாதம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை வற்றாத பிரச்சினைகளாக இருந்து கொண்டு நமது முன்னேற்றத்துக்கும் வளத்துக்கும் இடையூறாக உள்ளன. உலகலாவிய பிரச்சினைகளையும், பிராந்திய பிரச்சினைகளையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து நாங்கள் ஆலோசிப்போம். பல துருவங்களைக் கொண்ட உலகில் இந்தியாவும் ரஷ்யாவும் விதிவிலக்காக நிலையான உறவை கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்..

இதையடுத்துப் பேசிய செர்கி லாரோவ், "சர்வதேச சமூகம் சந்திக்கும் மாற்றங்களுடன், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் ரஷ்ய அதிபரும், இந்தியப் பிரதமரும் நிர்ணயித்த இலக்குகளை நோக்கி இருநாடுகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து மதிப்பிடுவது மிகவும் முக்கியம்.

ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா தற்போது நிரந்தரமற்ற உறுப்பு நாடாக உள்ளது. இந்தச் சூழலில், நாங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். நாங்கள் இன்று நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் சிறப்பாக இருந்ததாக நம்புகிறேன்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x