Published : 07 Nov 2022 01:12 PM
Last Updated : 07 Nov 2022 01:12 PM
ஷார்ம் எல்-ஷேக்: காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதி/இழப்பீடு வழங்க காப் குழுவில் இடம்பெற்றுள்ள 194 நாடுகளும் ஒப்புக்கொண்டன.
ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை (UNFCCC) 1992இல் உருவாக்கப்பட்டது. இந்தப் பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 197 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் Conference of Parties (சுருக்கமாக COP; ‘Parties’ என்பது நாடுகள்) என்ற மாநாட்டைக் கூட்டி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்துவருகின்றன. அந்த வகையில், 27ஆவது ஆண்டுக் கூட்டமான ‘COP 27’, நவம்பர் 6 தொடங்கி 18 வரை எகிப்தில் உள்ள ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் கூட்டத்தில் கால நிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு சேத நிதி\இழப்பீடு வழங்க காப் குழுவில் இடம்பெற்றுள்ள 193 நாடுகளும் ஒப்புக் கொண்டன.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கால நிலை மாற்ற குழு தலைவர் சைமன் ஸ்டீல் பேசும்போது, “ இது முன்னேற்றத்தை குறிக்கிறது. நாடுகள் இந்தமுறை ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை எடுத்துள்ளன” என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வளரும் நாடுகள், தனி தீவுகள் , ஆப்பிரிக்க நாடுகள், பழங்குடி சமூகங்கள் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வளர்ந்த நாடுகளிலிருந்து இழப்பீடு கேட்டிருந்தனர். இந்த நிலையில் காப் குழுவில் எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்பை பெற்றுள்ளன.
காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பெரும் வெள்ளம், புயல், அதீத மழையினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் ஆர்டிக், அண்டார்டிக்கா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT