Published : 07 Nov 2022 09:42 AM
Last Updated : 07 Nov 2022 09:42 AM
நியூயார்க்: அண்மையில் சமூகவலைதளமான ட்விட்டரில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு இதுவரை மெட்டா நிறுவனம் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.
வரும் புதன்கிழமைக்குள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து மெட்டா அதிகாரபூர்வ தகவலை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச பொருளாதார மந்தநிலை, டிக்டாக் உள்ளிட்ட தலங்கள் விடுக்கும் சவால், ஆப்பிளின் ப்ரைவசி கொள்கைகளில் மாற்றம், மெட்டா வெர்ஸ் ஆய்வில் மாற்றம் ஆகிய பிரச்சினைகளின் காரணமாக ஆட்குறைப்பை கையிலெடுக்க மெட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், "மெட்டாவெர்ஸில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் லாபம் ஈட்டித்தர இன்னும் ஒரு தசாப்தம் கூட ஆகலாம். அதற்கிடையில் சில புதிய வேலைவாய்ப்புகளை நிறுத்திவைப்பது, புதிய திட்டங்களை ஊக்குவிக்காமல் இருப்பது போன்ற செலவினக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது அவசியம். 2023ல் எங்கள் முதலீடுகள் மிகமிக குறைவானதாக இருக்கும். வளர்ச்சியில் முக்கியத்துவம் தரவிருக்கிறோம். அதனால் சில குழுக்கள் வளரும். சிலவற்றில் புதிய நியமனங்கள் இருக்காது. வருங்காலங்களில் அவற்றின் அளவும் குறையலாம். 2023ல் ஆள்பலத்தைப் பொருத்தவரை மெட்டா இப்போது இருக்கும் அளவிலேயே இருக்கலாம். இல்லாவிட்டால் சற்றே குறையலாம்." என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க். அப்போது முதலே அவருக்கே உரிய பாணியில் சில அதிரடி நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறார் அவர். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ப்ளூ டிக் பயனர்கள் இடத்தில் மாதந்தோறும் அதற்கு சந்தா வசூலிக்கவும் இருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். இப்போது அது சில சர்வதேச நாடுகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சிலர் பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மெட்டா லேஆஃப் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது அதன் ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT