Published : 04 Nov 2022 11:00 AM
Last Updated : 04 Nov 2022 11:00 AM

அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தால் அப்படியே திரும்பி வீட்டுக்குப் போங்கள்... எலான் மஸ்க் அதிரடி

எலான் மஸ்க்

சான்ஃப்ரான்சிஸ்கோ: "நீங்கள் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தாலோ அல்லது அலுவலகத்திற்கு ஏற்கெனவே வந்துவிட்டாலோ வீட்டுக்குத் திரும்பலாம். வெள்ளிக்கிழமை மாலைக்குள் நீங்கள் வேலையில் இருக்கிறீர்களா இல்லையா என்பது பற்றி உங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்" என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ட்விட்டர் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்.

டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் வலைதளத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். அவர் ட்விட்டரை வாங்கியவுடனே முதலில் செய்த வேலை அதன் சி இஓ பராக் அகர்வால், ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பொறுப்பிலிருந்து நீக்கினார். ட்விட்டர் போர்டை கலைத்துவிட்டு ட்விட்டரின் ஒற்றை இயக்குநராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார். இவ்வாறு அதிரடியாக செயல்படத் தொடங்கிய எலான் மஸ்க், இனி பயனர்கள் தங்கள் கணக்கை வெரிஃபைடு கணக்காக வைத்துக் கொள்ள மாதச் சந்தா கட்ட வேண்டும் என்றும் அறிவித்தார். அதற்காக செலிப்ரிட்டிகளிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டும் வருகிறார்.

மெகா லேஆஃப்: இந்நிலையில் ட்விட்டரில் மிகப்பெரிய அளவில் லே ஆஃப் எனப்படும் ஊழியர்கள் பணி நீக்கம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நேற்று ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "நீங்கள் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தாலோ அல்லது அலுவலகத்திற்கு ஏற்கெனவே வந்துவிட்டாலோ வீட்டுக்குத் திரும்பலாம். வெள்ளிக்கிழமை மாலைக்குள் நீங்கள் வேலையில் இருக்கிறீர்களா இல்லையா என்பது பற்றி உங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

நீங்கள் வேலையில் நீடிக்கிறீர்கள் என்றால் அலுவலக இமெயில் முகவரிக்கு மெயில் அனுப்பப்படும். நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதன் விவரம் உங்களது தனிப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும். ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையை நோக்கி இட்டுச் செல்ல உலகளவில் பணியாட்களைக் குறைக்கும் கடினமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆகையால் ட்விட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடியிருக்கும். அனைத்துவிதமான பேட்ஜ் ஆக்சிஸஸும் நிறுத்தப்படும். இது ஊழியர்கள், ட்விட்டர் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி எடுக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ட்விட்டர் ஊழியர்கள் கடுமையான மன உளைச்சலில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x