Published : 04 Nov 2022 05:59 AM
Last Updated : 04 Nov 2022 05:59 AM

இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் - சீன தூதர் வலியுறுத்தல்

கொல்கத்தா: இந்தியா, சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டிய அவசியமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் வூஹான் நகரத்தில் முதன் முதலாக கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அது பிற நாடுகளுக்கும் வேகமாக பரவியது. அதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சீனாவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான இந்திய குடும்பங்கள், வர்த்தகர்கள், அதேபோன்று அங்கு படித்து வரும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில்தான் விசாவுக்கான தடையை சீனா நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சீனா தூதர் ஷா லியு தெரிவித்துள்ளதாவது: இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி வான் வழிப் போக்குவரத்து சேவை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

இதற்காக, இரு நாட்டு அரசுகளும் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் சீனாவுக்கு திரும்பி செல்ல மிகவும் ஆவலுடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை: தற்போது சீனா செல்ல விரும்பும் இந்திய பயணிகள் இலங்கை, நேபாளம், மியான்மர் வழியாக சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் அதிகமான தொகை செலவிட வேண்டியுள்ளது.

நிறுத்தப்பட்ட நேரடி விமான சேவையினை தொடங்குவதற்கு இந்தியா மற்றும் சீனா இடையே பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பேச்சு வார்த்தையில் சிறிய முன்னேற்றம் கூட தென்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x